இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் கமல் ஹாசன். சிறு வயதிலிருந்தே நடித்துவரும் அவர் இதுவரை 232 படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பல சோதனை முயற்சிகளை தொடங்கி வைத்தவரும் அவர்தான். அதனால்தான் சாமானியர்கள் முதல் திரையுலக பிரபலங்கள்வரை அவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். குறிப்பாக தற்போதைய திரையுலகில் லோகேஷ் கனகராஜ், கௌதம் மேனன், மணிகண்டன் உள்ளிட்டோர் எவ்வளவு பெரிய கமல் ரசிகர்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான்.
சினிமாவில் ஃபுல் பார்மில் இருந்த கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியலில் கவனம் செலுத்தினார். தேர்தலிலும் களமிறங்கினார். ஆனால் தோல்வியே அவருக்கு கிடைத்தது. இந்தச் சூழலில் தனது தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 500 கோடி ரூபாய்வரை வசூலித்தது.
அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தில் கிடப்பில் போடப்பட்ட இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தூசு தட்டப்பட்டிருக்கிறது. இதனால் ஆண்டவரின் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். ஷங்கர் இயக்கத்தில் படத்தின் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்கா, சூரத், தமிழ்நாடு என பல்வேறு இடங்களில் நடந்தது. தென் ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய ரயில் சண்டை தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது., அதேபோல் சூரத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்கும்படியும் காட்சிகள் எடுக்கப்பட்டன. அதனை ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த இயக்குநர் வசந்தபாலன் படமாக்கியது குறிப்பிடத்தக்கது.
படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடையவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியன் 2வுக்காக கமல் ஹாசன் ரொம்பவே கஷ்டப்பட்டார் என்றும் அவர் போட்டிருக்கும் மேக்கப்பால் திட உணவுகள் எதையும் சாப்பிட முடியாமல் திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. அதனை கேட்ட ரசிகர்கள் ஆண்டவர் இந்த வயதிலும் எவ்வளவு கஷ்டப்படுகிறார் என சிலாகித்தனர்.
இந்நிலையில் இந்தியன் 2 படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தில் கமல் ஹாசன் பெண் வேடம் போட்டிருக்கிறாராம். பாடலின் ஒரு காட்சியில் அந்த வேடத்தில் அவர் வருவார் என கூறப்படுகிறது. கமல் ஹாசன் ஏற்கனவே அவ்வை சண்முகி மற்றும் தசாவதாரம் ஆகிய படங்களில் பெண் வேடம் அணிந்திருக்கிறார். அதிலும் அவ்வை சண்முகியில் அவர் போட்டிருந்த பெண் வேடம் இந்திய அளவில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தப் படத்தில் போட்டிருக்கும் வேடமும் அதேபோல் பிரபலமாகும் என கமல் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.





