தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். கடந்த 30 ஆண்டுகளில் அவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை 15 மட்டும் தான். அதில் 13 படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றி படங்களாக இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் மிக மோசமான தோல்வியை தழுவின.
இந்நிலையில் மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி வரலாற்று நாவலை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்பதில் இயக்குனர் ஷங்கர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். கொரோனா காலகட்டத்திலேயே அந்த படத்துக்கான திரைக்கதையை எழுதி விட்டதாக ஏற்கனவே ஷங்கர் ஒரு முறை நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். அன்று முதல் வேள்பாரி கதைக்கு தகுந்த ஹீரோவை ஷங்கர் தேடி வருகிறார்.
ஆரம்பத்தில் வேள்பாரி படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் திடீரென மறுத்துவிட்டார். அடுத்து வேள்பாரி ஹீரோ கேரக்டரில் நடிக்க நடிகர் சூர்யாவை ஷங்கர் கமிட் செய்ய முயற்சித்தார். ஆனால் சூர்யா தரப்பிலும் சம்மதம் கிடைக்கவில்லை. அதன் பிறகு நடிகர் ரஜினியை சந்தித்து கதை சொன்னார். அடுத்தடுத்த படங்கள் கைவசம் இருப்பதால் இப்போதைக்கு கால்சீட் தர முடியாது என்று ரஜினியும் மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷிடம் ஷங்கர் சென்ற நிலையில் அவரும் நிறைய படங்களில் ஏற்கனவே கமிட்டாகி விட்டதால் வேள்பாரி படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை என்று மறுத்துவிட்டார். இந்நிலையில் வேள்பாரி படத்தில் யாரை ஹீரோவாக வைத்து படம் பண்ணுவது என்று இயக்குனர் ஷங்கர் தவித்து வருகிறார்.
பெரிய பட்ஜெட் படம் என்பதால் முன்னணி நட்சத்திர ஹீரோ தான் நடிக்க வேண்டும் என்பதில் ஷங்கர் உறுதியாக இருக்கிறார். இதற்கிடையே வேள்பாரி படத்தை தயாரிக்க முன்வந்த மும்பை பென் மீடியா தயாரிப்பு நிறுவனமும் பின் வாங்கி விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் இயக்குனர் ஷங்கரின் கடைசி 2 படங்கள் இந்தியன் 2 கேம் சேஞ்சர் படங்கள் சரியாக போகவில்லை.
வேள்பாரி படத்தை தயாரிக்க பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட் தேவைப்படுகிறது. ஷங்கரை நம்பி அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் இப்போதைக்கு முன்வரவில்லை. ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 3 படப்பிடிப்பு பாதியில் நிற்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் வேள்பாரி படத்தில் நடிக்க தமிழில் முன்னணி ஹீரோக்கள் யாரும் முன்வராத நிலையில் ஷங்கர் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.





