கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதியன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி நாளில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன், துல்கர் சல்மான் நடித்த தெலுங்கு டப்பிங் படம் லக்கி பாஸ்கர், ஜெயம் ரவி நடித்த பிரதர், கவின் நடித்த பிளடி பெக்கர் ஆகிய 4 படங்கள் தான் வெளியானது.
இதில் கவின் நடித்த பிளடி பெக்கர் படமும் ஜெயம் ரவி நடித்த பிரதர் படமும் தியேட்டர்களுக்கு வந்த சுவடு தெரியாமல் சில தினங்களிலேயே காணாமல் போய்விட்டன. ஆனால் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படமும், துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் ஆதரவையும் பெற்றன.
பிளடி பெக்கர், பிரதர் ரிலீஸ் ஆன திரையரங்குகளில் அந்த படங்களுக்கு பதிலாக அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் படங்களே அதிக எண்ணிக்கையில் திரையிடப்பட்டன. வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான படம் லக்கி பாஸ்கர். இந்த படத்தை நாக வம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது.
இந்த படத்தில் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தார். இவர் தி கோட் படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆர்ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தின் நாயகியும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி வி பிரகாஷ் குமார் லக்கி பாஸ்கர் படத்துக்கு இசையமைத்திருந்தார். தீபாவளி பண்டிகைக்கு வெளியான படங்களில் லக்கி பாஸ்கர், அமரன் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே பெரிய வரவேற்பு பெற்றன.
இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் ஹன்சன் மெத்தா தனது இயக்கத்தில் கடந்த 1992ம் ஆண்டு வெளியான ஸ்கேம் தொடரின் கதைதான் லக்கி பாஸ்கர் என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் இயக்கியிருந்த ஸ்கேம் வெப் தொடரின் பெரும் பகுதியை தயாரிப்பாளர் நாக வம்சி, லக்கி பாஸ்கர் படத்தில் பயன்படுத்தியுள்ளார். ஸ்கேம் போன்ற ஒரு இந்தி தொடரை பிற மொழிகளில் பார்ப்பதற்கு சந்தோஷமாகத்தான் உள்ளது என்று கூறியுள்ளார்.
லக்கி பாஸ்கர் படத்தில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கும் துல்கர் சல்மான் குடும்பத்தின் வறுமை காரணமாக பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டு இறுதியில் பெரிய செல்வந்தராகி வெளிநாட்டில் ஸ்டார் ஓட்டல் அதிபராக மாறி இருப்பார். அதேபோல் கடந்த 1992ம் ஆண்டு பங்குச்சந்தை ஊழலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய வெப் தொடர் ஸ்கேம். இதனை ஹன்சன் மெத்தா இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





