சினிமா நடிகர், நடிகைகள் திருமணம் என்றாலே ரசிகர்களுக்கு மட்டுமின்றி சம்பந்தப்பட்ட அந்த நட்சத்திரங்களின் பெற்றோர்களுக்கும் திக் திக் என திகிலாகவே இருக்கிறது. ஏனெனில் சினிமா துறையில் கோடி கோடியாக சம்பளம் வாங்கும் சில முன்னணி நடிககைள், திருமண வாழ்வை சில ஆண்டுகளிலேயே வெறுத்து விடுகின்றனர்.
அதனால் சக நடிகரை காதல் திருமணம் செய்திருந்தாலும், அல்லது பெற்றோர் நிச்சயித்தோ அல்லது வேறு புதிய நபர்களை காதலித்தோ திருமணம் செய்திருந்தாலும் திடீரென தங்களது மண வாழ்க்கையை முறித்துக்கொள்கின்றனர். இது ரசிகர்களை பலத்த ஏமாற்றமடைய செய்கிறது. சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோருக்கும் பலத்த அதிர்ச்சியை தருகிறது.
இதற்கு பயந்துக்கொண்டே சில நடிகர்கள், நடிகைகள் திருமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இன்றும் வாழ்கின்றனர். கேட்டால், நெருக்கமான மற்றவர்களின் திருமண வாழ்க்கை மிக மோசமாக இருப்பதால் தங்களது திருமணம் குறித்து யோசிப்பதாக கூறுகின்றனர். அது ஏற்கக் கூடிய உண்மையாகவும் இருக்கிறது.
இந்த சூழலில் கடந்தாண்டில் பல முக்கிய நட்சத்திரங்கள் பிரிவதாக அறிவித்த நிலையில், கோர்ட்டுகளில் அவர்களது விவாகரத்து வழக்குகள் விசாரணையில் இருந்து வருகின்றன. நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பிரிந்தும் விட்டனர். எனினும் சில நட்சத்திர தம்பதியர் காலம் முழுக்க அதே அன்புடன் இணைந்து வாழ்ந்து காட்டுகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி நடிகை கீர்த்தி சுரேஷ், தனது 15 ஆண்டு கால நண்பர் அந்தோணி தட்டில் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சமீபத்தில் இந்த தம்பதி, தாய்லாந்து நாட்டுக்கு தேனிலவு சென்று திரும்பியிருக்கின்றனர். சமீபத்தில் தனது திருமண வாழ்க்கை குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு நேர்காணலில் கூறுகையில், திருமணத்திற்கு முன்பே நானும் ஆண்டனியும் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்ததால் ஒருவரை ஒருவர் நன்கு அறிவோம். அதனால் திருமணத்துக்கு பிறகு இப்போது பெரிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை.
நான் எப்போதுமே சோசியல் மீடியாவில் நான் மூழ்கி இருப்பேன். அது எனது கணவருக்கு சங்கடமாக உள்ளது என்றாலும், அவர் அதை குற்றம் குறை சொல்வதில்லை. என்னை புரிந்து கொள்ளக் கூடியவர் என்பதால் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுத்து செல்கிறார். அதனால் எங்களது குடும்ப வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக செல்லும் என்று கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.





