சிறுத்தை, வீரம், விவேகம், விஸ்வாசம், வேதாளம், அண்ணாத்த, கங்குவா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் சிறுத்தை சிவா. இவரது தம்பி பாலா. தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். வீரம் படத்தில் அஜீத்குமாரின் தம்பிகளில் ஒருவராகவும், அண்ணாத்த படத்தில் வில்லன் குரூப்பை சேர்ந்தவராகவும் பாலா நடித்திருந்தார்.
தமிழ் படங்களை காட்டிலும் மலையாள படங்களில் அதிகமாக நடித்தவர் நடிகர் பாலா. இவர் ஏற்கனவே 3 திருமணங்கள் செய்து விவாகரத்து ஆன நிலையில் தற்போது நான்காவதாக கோகிலா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவரது முன்னாள் மனைவிகளுடன் இவருக்கு ஏற்பட்ட குடும்ப பிரச்னைகள், அதனால் ஏற்படும் சர்ச்சைகள், ரசிகர்களின் விமர்சனங்கள் என தொடர்ந்து நடிகர் பாலா சம்பந்தப்பட்ட செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த தனது உறவினர் மகள் கோகிலா என்பவரை நடிகர் பாலா நான்காவதாக திருமணம் செய்து இருக்கிறார். இந்நிலையில் திருமணமான பிறகு கொச்சியிலிருந்து வைக்கம் நகருக்கு தனது வீட்டை மாற்றிய பாலா, எனக்கு கொடுத்த அதே ஆதரவை என் மனைவி கோகிலாவுக்கும் தரவேண்டும் என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
ஆனால் இவரது முந்தைய திருமணங்கள் மற்றும் விவாகரத்துகள், இப்போது நடந்த புதிய திருமணம், இந்த ஜோடிக்கான அதிக வயது வித்தியாசம் என பல விஷயங்களில் சமூக வலைதளங்களில் பலரும் தொடர்ந்து நடிகர் பாலா மற்றும் அவரது மனைவியை கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில், நடிகர் பாலாவின் இப்போதைய மனைவி அவரது மாமாவின் மகள் அல்ல, அவரது வீட்டில் வேலை பார்த்த வேலைக்கார பெண்ணின் மகள்தான் என்பது போன்றும் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இணையத்தில் வைரலான இந்த செய்தியை பார்த்த நடிகர் பாலா, பலத்த ஆவேசம் அடைந்துள்ளார். இதற்கு பதிலடி தரும் விதமாக அவர் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகர் பாலா கூறியிருப்பதாவது, என் மனைவியை எப்படி வேலைக்காரி என்று நீங்கள் சொல்லலாம், அந்த உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது, இதே போல் நான் உங்கள் மனைவியை அப்படி சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்.
என் மனைவியின் தந்தை அரசியலில் பிரபலமான ஒருவராக இருக்கிறார். நான் இது குறித்து போலீசில் புகார் அளிக்க தயாரான போது, வேண்டாம் விட்டுவிடுங்கள். இதை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று அவர் கூறிவிட்டார். ஆனாலும் இப்படி ஒரு செய்தியை பரப்பியவர்கள், இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு தெரியும். நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மட்டும் உறுதி என்று அந்த வீடியோவில் நடிகர் பாலா கூறியிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.





