- Advertisement -
Homeபொழுதுபோக்குஇட்லி கடையில் இருந்து சுடச்சுட ஆவி பறக்க அப்டேட் ரெடி... விசில் போட காத்திருக்கும் தனுஷ்...

இட்லி கடையில் இருந்து சுடச்சுட ஆவி பறக்க அப்டேட் ரெடி… விசில் போட காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தனுஷிற்கு பல முகங்கள் உண்டு. நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை பெற்று பட்டையை கிளப்பி வருகிறார். இதில் அவரது இயக்கத்தில் முதலாவதாக வெளிவந்த பவர் பாண்டி திரைப்படம், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. காதலை இப்படியும் கூறலாமா என படத்தைப் பார்த்துவிட்டு பலரும் ஆச்சரியம் அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து தனது இயக்கத்திற்கு நீண்ட இடைவேளை விட்ட தனுஷ் தனது ஐம்பதாவது திரைப்படமான ராயனை இயக்கி நடித்தார். கலவையான விமர்சனத்தை பெற்ற இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக லாபத்தை கொடுத்தது. பிறகு, இளைஞர்களின் காதலை மையப்படுத்தி நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

- Advertisement -

ஆனால் இதுவும் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படியான சூழலில்தான் தனுஷ் இயக்கத்தில் நான்காவது திரைப்படமாக அமைந்திருக்கிறது இட்லி கடை. டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், ஆகாஷ் பாஸ்கரன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். தனுஷ் தனது சொந்த மாவட்டமான தேனியை மையப்படுத்தி இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார்.

இதில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நித்யா மேனன். அண்மையில் அவர் அளித்த பேட்டியில், இட்லி கடை திரைப்படத்திற்காக வெறும் கைகளில் மாட்டுச் சாணத்தை அள்ளியதாகவும், மறுநாள் தேசிய விருதை பெறும் பொழுது தனது கை விரல்களில் அந்த மாட்டுச் சாணம் ஒட்டி இருந்தது என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

இட்லி கடை திரைப்படத்தில் நாம் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம், அதில் வில்லனாக நடித்திருக்கும் அருண் விஜய் கதாபாத்திரத்தை பற்றி தான். கிராமத்து வாழ்வியலையும் குத்துச்சண்டையையும் இந்த திரைப்படம் காட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏன் படத்தில் கூட அருண் விஜய் குத்துச்சண்டை வீரராகதான் நடித்திருக்கிறார்.

இதுபோக, ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்டோரும் இட்லி கடை திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் நிலையில், அதன் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அனேகமாக தனுஷின் பிறந்த நாளான ஜூலை 27ஆம் தேதி இட்லி கடை திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்