தமிழ் சினிமாவில் 50 ஆண்டு கால இசை சரித்திரமாக வாழ்ந்து வருபவர் இசைஞானி இளையராஜா. இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர். பல ஆயிரக்கணக்கான பாடல்களை தனது இசையால் உருவாக்கியவர். வேலியண்ட் சிம்பொனி இசைக்கு சொந்தக்காரர் என பல பெருமைகளை கொண்டவர்.
இப்போது தனது 2வது சிம்பொனிக்கு தேவையான நோட்ஸ் எழுதிவிட்டதாக சமீபத்தில் இளையராஜா கூறியிருந்தார். தமிழ் சினிமாவில் இளையராஜா இசை தான் பல ஆயிரக்கணக்கான படங்களை ஜெயிக்க வைத்தது. இப்போதும் இளையராஜா பாடல்கள்தான் பலருக்கு நிம்மதியான தூக்கத்தை தருகின்றன என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக திட்டமிடப்பட்டது. இளையராஜா கேரக்டரில் நடிகர் தனுஷின் நடிப்பில் இந்த படத்தை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக இளையராஜா பயோபிக் படத்தின் தொடக்க விழா கடந்த 2024ம் ஆண்டு சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் இயக்குனர்கள் கலந்துக்கொண்டனர். இளையராஜா கேரக்டரில் நடிகர் தனுஷ் நடிக்கவும் சாணிக்காயிதம் கேப்டன் மில்லர் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இளையராஜா பயோபிக் படத்தை இயக்குவதாகவும் 2 பாகங்களாக இந்த படம் உருவாகும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 2 ஆண்டுகளான நிலையில் இந்த படம் சார்ந்த எந்த அறிவிப்பும் அப்டேட்டும் இதுவரை இல்லை. இதற்கிடையே இளையராஜா பயோபிக் படம் குறித்த தகவல்களை சேகரிக்க 6 மாதங்கள் வரை அவருடன் அருண் மாதேஸ்வரன் ஒன்றாக பயணிக்கவும் இளையராஜா தரும் விஷயங்களை குறிப்பெடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஆனால் ஒரு கட்டத்தில் இளையராஜா பயோபிக் கைவிடப்பட்டு விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போதைய தகவலின்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் டிசி என்ற படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் இளையராஜா பயோபிக் படத்தை அவர் தொடங்குவார். இளையராஜா பயோபிக் படம் குறித்த பல முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கோலிவுட்டில் தகவல் கசிந்துள்ளது.





