தமிழ் சினிமாவில் கடந்த 47 ஆண்டுகளாக, இசை சாம்ராஜ்ய சக்கரவா்த்தியாக இருந்து வருகிறார் இசைஞானி இளையராஜா. இவரது இசையால் தமிழ் சினிமா ஒரு காலகட்டத்தில் வாழ்ந்தது என்றால் அது பொய்யல்ல. எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மையாக தான் அது இருந்தது. ஏனென்றால் தேனில் விழுந்த பலாச்சுளை போல தித்திக்கும் பாடல்களை தந்தவர் இளையராஜா.
தமிழ் சினிமாவில் பல இசை சாதனை புரிந்த இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. கேப்டன் மில்லர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்கும் இந்த படம், இரண்டு பாகங்களாக உருவாகிறது. இந்த படத்தில் வைரமுத்து, பாரதிராஜா உள்ளிட்ட கேரக்டர்களை ஏஐ தொழில்நுட்பத்திலோ அல்லது அவர்களது முக சாயல் உள்ள துணை நடிகர்களையோ நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.
இளையராஜாவை பொருத்த வரை இசையில் அவர் ஞானியாக இருந்தாலும், சராசரி மனிதராக மிக அதிகமான கோபமும், ஆவேசமும் கொண்டவராக இருக்கிறார் என்பதுதான் பலரது விமர்சனமாக இருக்கிறார். குறிப்பாக பொது இடங்களிலும், தனிப்பட்ட நேர்காணல்களிலும் மூர்க்கத்தனமான அவரது பேச்சு, பலரது மனங்களை காயப்படுத்தி விடுகிறது.
குறிப்பாக, நான் இசையமைத்த பாடல்கள் எனக்கே சொந்தம் என்று, அவர் இப்போது கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். மேலும், அவரது பாடல்களை படங்களில் பயன்படுத்தினால் எப்படி என் அனுமதியின்றி நான் இசையமைத்த பாடலை பயன்படுத்தலாம் என்று அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி கேள்வி கேட்கிறார். சமீபத்தில் கூலி படம் டீசரில் என் இசையை ஏன் பயன்படுத்தினீர்கள் என கேள்வி கேட்டு, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார் இளையராஜா.
இப்போது அவர், மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கண்மணி அன்போடு காதலன் என்ற பாடலை, என் அனுமதியின்றி எப்படி மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்தலாம் எனக் கேட்டு, அதற்கு நஷ்ட ஈடு தரச்சொல்லி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், சிரிப்பையும் வரவழைத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 22ம் தேதி மஞ்சும்மெல் பாய்ஸ் ரிலீசானது. பட்டி தொட்டியெங்கும் அந்த பாடல்தான் அந்த படத்தின் ஹைலைட் என பேசப்பட்டது. சமூக வலைதளங்களில் அந்த பாடல் காட்சி வைரலானது. அந்த படக்குழு கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆசியும், பாராட்டும் பெற்றது. ஓடிடியிலும் அந்த படம் ரிலீசாகிி 15 நாட்களாகிறது. இத்தனை நாட்கள் கழித்து, இசைஞானி இப்போது நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாரே, இத்தனை நாளாக என்ன செய்து கொண்டிருந்தார் என, கலாய்த்து வருகின்றனர்.





