தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே தனக்கென ஒரு தனி மார்க்கெட்டை உண்டாக்கி சாம்ராஜ்யம் படைத்து வைத்திருக்கிறார் தளபதி விஜய். விஜய்யின் திரைப்படங்கள் இங்கு வெற்றியா தோல்வியா என்பதை தாண்டி அதன் வசூல் மட்டுமே பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் குடும்பங்கள் இளைஞர்கள் குழந்தைகள் என ஒரு பெரும் வட்டாரத்தை அவர் தனக்குள் வைத்திருக்கிறார்.
இதன் காரணமாகவே விஜய், இப்போது வரை தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த ஆண்டு சினிமாவை கைவிட்டு முழு நேர அரசியலில் இறங்கப் போவதாக தெரிவித்தார் விஜய். இது பலருக்கு ஆச்சரியத்தையும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுத்தது.
விஜய் அரசியலில் வேண்டுமானால் ஈடுபட்டு கொள்ளட்டும் ஆனால் நிச்சயம் வருடம் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தற்போது வரை கூறி வருகின்றனர். இருப்பினும் தனது முடிவில் தீர்க்கமாக இருக்கும் விஜய், கடைசி திரைப்படத்தை ஹெச் வினோத்திடம் ஒப்படைத்து இருக்கிறார். அதேபோல் முழு நேர அரசியலிலும் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.
வினோத் ஏற்கனவே அஜித்தை வைத்து மூன்று திரைப்படங்களை இயக்கியவர். சதுரங்க வேட்டை தீரன் என தரமான திரைப்படங்களை கொடுத்தவர். இதனால் அவர் மீது ரசிகர்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கை உள்ளது. தற்போது ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி விட்டதாக சொல்கிறார்கள். பெரும்பாலான ஷூட்டிங் சென்னை பையனூரில் உள்ள படப்பிடிப்பு தளத்திலேயே நடத்தப்பட்டது.
கே வி என் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், கதாநாயகியாக வருகிறார் பூஜா ஹெக்டே. மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ், நரேன், பிரியாமணி, பாபி தியோல், கௌதம் மேனன் உள்ளிட்ட பெரும் நட்சத்திரமே படத்தில் இருக்கிறது. இதன் சில காட்சிகளை மட்டும் எடுக்க கொடைக்கானலுக்கு சென்றார்கள் படக்குழு.
அங்கு மூன்று நாட்களில் படப்பிடிப்பை முடித்தார் வினோத். அதில் கருப்பு டை அடித்து இளமையாக காட்சியளித்தார் விஜய். அரசியல் கலந்த கமர்சியல் திரைப்படமாக இது எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல் படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயருக்கு, தளபதி வெற்றி கொண்டான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது டிவிகே என்று தான் அழைப்பார்களாம். விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியும் டிவிகே என்று அழைக்கப்படும் நிலையில் அதையே வித்தியாசமாக இதில் பயன்படுத்தி இருக்கிறது படக்குழு என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.





