இந்த ஆண்டை பொருத்த வரை தமிழ் சினிமாவுக்கு மிகவும் ஏமாற்றம் தந்த ஒரு ஆண்டாக தான் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பெரிய அளவில் வெற்றி பெறும், ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் படுதோல்வி படங்களாக அமைந்தன. அதிலும் சில படங்கள் ரசிகர்களை கதற வைத்தன.
இந்த ஆண்டின் துவக்கத்தில் 4 மாதங்கள் வரை வெளியான எந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறாமல் வந்த வேகத்திலேயே தியேட்டரை விட்டு காணாமல் போய்விட்டன. குறிப்பாக லால் சலாம், அயலான், ரத்னம், ஸ்டார் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த 4 மாதங்களும் பிரேமலு, மஞ்சும்மெல் பாய்ஸ், ஆடுஜீவிதம், பிரமயுகம் போன்ற மலையாள படங்கள் தமிழ் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன.
இந்த சூழலில் வெளியான சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 படம் பெரிய வரவேற்பை பெற்று 2024ம் ஆண்டில் ரூ. 100 கோடி வசூலித்த படம் என்ற பெருமையை தக்க வைத்தது. அதன்பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படம் கடும் விமர்சனத்தில் சிக்கினாலும், அந்த படமும் ரூ. 100 கோடி வசூலை கடந்தது. தொடர்ந்து விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா, தனுஷின் 50வது படம் ராயன் ஆகிய படங்களும் ரூ. 100 கோடி வசூலை கடந்தன. விஜய் நடித்த தி கோட் ரூ. 450 கோடி வசூலை எட்டியது.
லால் சலாம் படம் பலத்த தோல்வியடைந்த நிலையில், தசெ ஞானவேல் இயக்கத்தில் வெளியான வேட்டையன் படமும் ரூ. 100 கோடி வசூலை கடந்தது. கடந்த தீபாவளிக்கு வெளியான சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படமும் தற்போது ரூ. 300 கோடி கடந்து திரையில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. விக்ரம் நடித்த தங்கலான் ரூ. 100 கோடி வசூலை கடந்த படமாகும்.
இந்த சூழலில் கடும் விமர்சனங்களில் சிக்கி, ரசிகர்களால் கழுவி ஊற்றப்பட்ட கங்குவா படமும் கடந்த 4 நாட்களில் ரூ. 127 கோடி ரூபாய் என்ற வசூலை கடந்து ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் லிஸ்ட்டில் இணைந்து விட்டது. இந்த படம் ரூ. 2000 கோடி வசூலிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் 200 கோடி ரூபாய் கடக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
இப்படி தி கோட், அரண்மனை 4, வேட்டையன், இந்தியன் 2, ராயன், தங்கலான், மகாராஜா, அமரன், கங்குவா ஆகிய 9 படங்கள் இந்த ஆண்டில் வெளியாகி ரூ. 100 கோடி ரூபாய் என்ற வசூலை கடந்துள்ளன. 200 படங்களில், 9 படங்கள் மட்டுமே வசூலில் செஞ்சுரி அடித்திருக்கின்றன. இதுதவிர நடப்பாண்டில் வெளியான லப்பர் பந்து, சித்தா, லவ்வர், கருடன், டிமாண்டி காலனி 2, பிளாக் உள்ளிட்ட சில படங்கள் ரசிகர்களின் அதிக கவனம் பெற்ற வெற்றிப் படங்களாக இருந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.





