நடப்பாண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய திரைப்படங்களில் இந்தியன் இரண்டாம் பாகமும் ஒன்று. இதற்கு முக்கிய காரணம் 1996ஆம் ஆண்டு வெளியான அதன் முதல்பாகம் தான். ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசனின் திறமையான நடிப்பில், ஏஆர் ரஹ்மானின் அசத்தல் இசையில், கவுண்டமணி செந்தில் காமெடியில் வெளியாகி இருந்த இந்தியன் படம் சூப்பர் ஹிட் அடித்தது. சேனாதிபதி கதாபாத்திரத்தில் நடித்து ஒவ்வொரு காட்சியையும் உயிரோட்டமாக வைத்திருந்தார் கமல்ஹாசன்.
அதுவும் கிளைமேக்ஸ் காட்சியில் தவறு செய்த தனது மகனை கொல்ல துணிவதும், மகன் மேல் வைத்திருக்கும் பாசம் பற்றி மனிஷாவிடம் விளக்கும் காட்சியிலும் கண்கலங்க வைத்திருப்பார் சேனாதிபதி கமல்ஹாசன். படத்தில் மற்றொரு தூணாக அமைந்தது ஏஆர் ரஹ்மானின் இசை. காட்சிக்கு காட்சி வித்தியாச வித்தியாசமாக இசையை கொடுத்து புல்லரிக்க செய்திருப்பார் ரஹ்மான்.
குறிப்பாக கப்பலேறி போயாச்சு பாடலில் அவரது உழைப்பு நமக்கு தெரிந்திருக்கும். இப்படி இந்தியன் திரைப்படத்தை கேட்டால் அதில் உள்ள விஷயங்களை நம்மால் அடுக்கிக் கொண்டே போகமுடியும். அந்தளவுக்கு ஒரு நேர்த்தியான திரைக்கதையாக அது எடுக்கப்பட்டிருக்கும். இந்த எதிர்பார்ப்பிலேயே இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமும் கடந்த ஜூலை 12ஆம் தேதி வெளியானது.
கொரோனா காலத்திற்கு முன்பே தொடங்கிய இதன் சூட்டிங் பல்வேறு பிரச்னைகளால் விட்டுவிட்டு எடுக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் படமே தயாரானது. இந்த காலகட்டத்தில் இந்தியன் 2வில் இணைந்திருந்த விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா ஆகியோர் மறைந்து போனார்கள். சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, எஸ்ஜே சூர்யா என ஏராளமான நட்சத்திரங்கள் இதில் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தில் ஏஆர் ரஹ்மான் பட்டையை கிளப்பியிருந்த நிலையில் இதற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படி பல்வேறு விஷயங்கள் படத்தில் இருக்க திரையரங்கிற்கு சென்ற ரசிகர்களுக்கு வெறும் ஏமாற்றத்தைதான் படம் பரிசாக அளித்தது. மூன்று மணி நேரம் ஓடும் திரைப்படத்தில் ஒரு காட்சி கூட மனதில் ஒட்டவில்லை என கடும் அதிருப்தி தெரிவித்தார்கள் ரசிகர்கள். அதுவும் சேனாதிபதி கதாபாத்திரம் ஏமாற்றத்தை கொடுத்ததாகவும் அவர்கள் கூறினார்கள்.
படத்திற்கான மூன்றாம் பாகத்தையும் ஒரே சமயத்தில் எடுத்திருந்த ஷங்கர், அதன் முன்னோட்டத்தை இந்தியன் 2 இறுதிகாட்சியில் வைத்திருந்தார். ஆனால் இந்த பாகமே போதும் எனக்கூறி இணையதளவாசிகள் படத்தை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். இந்த சூழலில் இந்தியன் 2 படம், வரும் 9ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகி ஒரு மாதத்திற்குள்ளே அது ஓடிடிக்கு சென்றுவிட்டது. இதேபோல் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயனும் செப்டம்பர் மாதம் ஓடிடியில் வெளியாவதாக கூறப்படுகிறது.





