மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான “மாமன்னன்” திரைப்படம் இந்த மாதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நேற்று “மாமன்னன்” திரைப்படத்தின் மிக பிரம்மாணடமான இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசி திரைப்படம் இது என்பதால் ஆடியோ வெளியீட்டு விழாவை மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களும் கலைஞர்களும் கலந்துகொண்டனர். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மாரி செல்வராஜ், இதற்கு முன்பு இயக்கிய “பரியேறும் பெருமாள்”, “கர்ணன்” ஆகிய திரைப்படங்களுக்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்திருந்தார். இதனை தொடர்ந்து “மாமன்னன்” திரைப்படத்தில் மாரி செல்வராஜ் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைக்கோர்த்துள்ளார்.

மாரி செல்வராஜ் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை செட் ஆகுமா என பல ரசிகர்கள் சந்தேகம் கொண்டிருந்தனர். ஆனால் அந்த சந்தேகங்களை எல்லாம் தவிடுபொடியாக ஆக்கியுள்ளது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. இந்த நிலையில் “மாமன்னன்” திரைப்படம் குறித்தான ஒரு சூடான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
அதாவது இத்திரைப்படத்தில் வடிவேலு சபாநாயகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். அதே போல் உதயநிதி ஸ்டாலின் ஒரு கல்லூரி மாணவராகவும் கீர்த்தி சுரேஷ் ஒரு கம்யூனிஸ்ட் போராளியாகவும் வருகிறாராம். இவ்வாறு ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
மாரி செல்வராஜ் திரைப்படங்கள் பொதுவாக ஜாதிய ஏற்றத்தாழ்வை மையப்படுத்திய கதையம்சத்தை கொண்டிருக்கும். அதே போன்ற கதையம்சம் “மாமன்னன்” திரைப்படத்திலும் அமைந்திருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளிவரும் என கூறப்படுகிறது.





