நடிகர் விஜய் நடிப்பில் உருவான தி கோட் படம் வரும் வியாழன் அன்று காலை திரைக்கு வருகிறது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் காலை 7 மணிக்கும், கேரளாவில் அதிகாலை 4 மணிக்கும் தி கோட் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. மொத்தம் 6000 திரைகளில் உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் 1000 திரைகளிலும், கேரளம் மாநிலத்தில் 700 திரைகளிலும் தி கோட் படம் ரிலீஸாகிறது. இதில் கேரளாவில் மட்டும் அன்று ஒரு நாளில் மொத்தம் 4000 காட்சிகளுக்கு மேல் தி கோட் படம் திரையிடப்படுவதால் முதல் நாளில் கேரளம் மாநிலத்தில் தி கோட் படம் அதிக வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை தி கோட் படம் குறித்த பல்வேறு ரகசிய தகவல்களை அப்டேட் என்ற பெயரில், படத்தின் டைரக்டர் வெங்கட்பிரபு, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குனர் கங்கை அமரன், வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் பல முக்கிய தகவல்களை கூறி, ரகசியத்தை அம்பலப்படுத்தி விட்டனர். அதனால் இனி படத்தில் சஸ்பென்ஸ் என்னவாக தான் இருக்கும் என்ற கேள்வியே ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
ஏனெனில் படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு, படத்தின் 50 சதவீத கதை இதுதான் என்பது ரசிகர்களுக்கு தெளிவாக புரிந்துவிட்டது. இது ஒரு குண்டுவெடிப்பு கதை, அப்பா மகனாக விஜய் நடிக்கின்றனர். வில்லனாக மைக் மோகன் நடிக்கிறார். பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் போன்றவர்கள் விஜய்க்கு நண்பர்களாக நடிக்கின்றனர்.
இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் மறைந்த நடிகர்கள் விஜயகாந்த், விவேக் நடித்துள்ளனர். கேமியோ ரோலில் கிளைமாக்ஸில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். திரிஷா ஒரு அயிட்டம் பாட்டுக்கு விஜயுடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார். படத்தில் ஒரு பாடல், இளையராஜா பாட்டை யுவன் சங்கர் ராஜா ரீமிக்ஸ் செய்திருக்கிறார். பிரேம்ஜி, சினேகாவுக்கு தம்பியாக நடிக்கிறார் என பல முக்கிய தகவல்களை படக்குழு தெரிவித்து விட்டது.
இறுதியாக ஒரே ஒரு ரகசியம், கடைசி சண்டைக்காட்சி கிரிக்கெட் மைதானம் ஒன்றில் நடக்கிறது. இதில் சிஎஸ்கே ரசிகராக வெங்கட்பிரபு நடித்துள்ளார். அந்த காட்சியில் தோனி திரையில் காட்டப்படுகிறார். அதுவும் படத்தில் அவர் நடிக்கவில்லை. கிரிக்கெட் மைதானத்தில் அவர் வரும் காட்சிகள் திரையில் தெரியும்படி வெங்கட்பிரபு செய்திருக்கிறார். இப்படி எல்லா சஸ்பென்ஸ்சும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டதால், சோலி முடிஞ்சுது என நெட்டிசன்கள், தி கோட் படக்குழுவை கலாய்த்து வருகின்றனர்.





