லியோ படத்தின் வெற்றிவிழா, சென்னையில் உள்ள நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நாளை மாலை நடைபெற உள்ளது. லியோ இசை வெளியீட்டு நடக்காத போதிலும், படத்தின் வெற்றி விழா நடப்பது, ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. ஆன்லைனில், டிக்கெட் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது.
இந்த விழாவில் படத்தில் நடித்த விஜய், அர்ஜூன், மிஸ்கின், கவுதம் மேனன், திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட நடிகர், நடிகைகள், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர், தயாரிப்பாளர் தரப்பினர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரும் கலந்துக்கொள்ள உள்ளனர்.
இதற்கிடையே லியோ பட விழாவில், தமிழ் சினிமாவைச் சேர்ந்த முக்கிய இரண்டு பிரபல நடிகர்கள் கலந்துக்கொள்ள இருப்பதாக, தகவல் வைரலாகி வருகிறது. அது யாரென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் என்று பலரும் கூறி வருகின்றனர்.
ஏனென்றால், விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருந்தார். லியோ படத்திலும் கிளைமேக்ஸில், கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்திருந்தார். கமல்ஹாசன்தான் என்னுடைய திரையுலக குரு என்றும் லோகேஷ் கனகராஜ் கூறி வருகிறார். ஆண்டவர் என்றுதான் கமலை குறிப்பிடுகிறார்.
அதேபோல், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினி 171 படத்தை இயக்கப் போவதும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான். அதனால், ரஜினியும் இவ்விழாவில் கலந்துக்கொள்வதாக தகவல் வேகமாக பரவி வருகிறது. ஆனால், விஜய் ரசிகர்கள், ரஜினியை கலாய்த்து வரும் நிலையில், ரஜினி விழாவில் பங்கேற்றால் விஜய் ரசிகர்கள் ஏதேனும் தவறான வார்த்தைகளை கூச்சலிட்டால், நிலமை என்னாவது என்பதும் அச்சத்தை கிளப்புகிறது.
ஆனால், கடைசி நேர நிலவரப்படி, விழாவில் ரஜினி, கமல் இருவருமே கலந்துக்கொள்வதாக ஐடியா இல்லையாம். அப்படி எந்த ஏற்பாடும் விழாக்குழுவினர் சார்பில் நடவடிக்கை எடுக்கவில்லையாம். ஒருவேளை கமலை அழைத்தாலும் வர வாய்ப்புள்ளது. அவர் சிறப்பு விருந்தினராக வந்தாலும் பிரச்னை இல்லை. ஆனால், விஜய் பட வெற்றி விழாவுக்கு, விஜய் ரசிகர் கூட்டம் உள்ள இடத்துக்கு ரஜினியை அழைக்க, விஜய் விரும்ப மாட்டார். அவரே அழைத்தாலும் ரஜினி வரமாட்டார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.





