நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நடிகராக பாடகராக இயக்குனராக தயாரிப்பாளராக பல பரிமாணங்களை வெளிப்படுத்தி ஜெயித்து வருகிறார். அவரது 50வது படம் ராயன் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இந்த ஆண்டில் அமைந்தது. மொத்தம் 155 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தை இயக்கி நடித்திருந்தார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இட்லிக்கடை என்ற படத்தை தனுஷ் இயக்கி வருகிறார். படத்தின் நாயகனும் அவர்தான். அருண் விஜய் சத்யராஜ் ராஜ்கிரண் நித்யாமேனன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்க உள்ளனர். தேனி தென்காசி தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சில தினங்களுக்கு முன் நடிகர் தனுஷூக்கு படப்பிடிப்பில் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும், இதையடுத்து அவர் ஷூட்டிங்கை பிரேக்கப் செய்துவிட்டு, சென்னை திரும்பி விட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் சில தினங்களாக தனுஷ் படுத்த படுக்கையாக உள்ளார். அவரால் எழுந்திருக்க கூட முடியாத அளவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, இட்லிக்கடை படத்தை இயக்குபவர் தனுஷ்தான். அதிலும் நாயகனும் அவர்தான், படத்தில் ஒரு காட்சியில் வீடு தீப்பற்றி எரிகிறது. அப்போது தீப்பற்றி எரியும் வீட்டுக்குள் சென்று யாரையோ காப்பாற்றவோ, அல்லது ஏதோ ஒரு முக்கிய பொருளையோ தேடி எடுக்க வேண்டிய காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
அப்போது எரியும் வீட்டுக்குள் நடிகர் தனுஷே சென்றுள்ளார். டூப் நடிகர் போடலாம் என்று படக்குழுவினர் சொல்லியும் அவர் கேட்கவில்லை. இதே காட்சியில் வேறு ஹீரோ நடித்து டூப் போடலாம் என்று கூறினால் அந்த இயக்குனர் நிச்சயம் கோபப்படுவார். அப்படி ஒரு இயக்குனராக பார்த்தால், இந்த காட்சியில் டூப் போடாமல் நான்தான் நடிக்க வேண்டும் என்று கூறி நடித்திருக்கிறார்.
தீப்பிடித்த புகையும் எரியும் வீட்டுக்குள் அவர் சென்று வந்ததால் அவருக்கு டஸ்ட் அலர்ஜியால் புகை மூட்டத்தில் திணறல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்கனவே டஸ்ட் அலர்ஜி பிரச்னையும் இருந்துள்ளது. அதன்காரணமாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஷூட்டிங்கை கேன்சல் செய்திருக்கிறார். 2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். ஆங்கில புத்தாண்டை கொண்டாடிவிட்டு சென்னை திரும்ப உள்ளார். இதுதான் உண்மை நிலவரம் என்று அந்தணன் அதில் கூறியிருக்கிறார்.





