தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள் இருந்து நடிகராக மாறியவர்களை தனியாக பட்டியலிடலாம். இதில் ஜிவி பிரகாஷுக்கு அடுத்தபடியாக கவனம் பெறும் நடிகராக இருக்கிறார் விஜய் ஆண்டனி. நான் திரைப்படத்தின் மூலம் அவர் நடிகராக அறிமுகமானார்.
திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, அவரது திரையுலக வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது பிச்சைக்காரன் திரைப்படம்.
தாயின் உடல் நலம் வேண்டி பிச்சைக்காரனாக 30 நாட்கள் நேர்த்திக்கடன் இருக்கும் மகனின் கதை தான் இந்த திரைப்படம். அம்மாவின் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இது மட்டுமல்ல தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கும் வசூல் மழை குவித்தது
இதனால் தெலுங்கு திரைப்பட உலகிலும் பெரிதாக பேசப்பட்டார் விஜய் ஆண்டனி. ஆனால் இதன் பிறகு அவருக்கு வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தன. அண்மையில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெறவில்லை என்றாலும், கலெக்ஷனில் ஓரளவு கல்லா கட்டியது.
இப்படியான சூழலில் தற்போது அவர் ரோமியோ எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். விநாயக வைத்தியநாதன் என்பவர் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, வி டிவி கணேஷ் உட்பட ஏராளமான நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டரில், முதலிரவு அன்று விஜய் ஆண்டனி கையில் பால் வைத்திருப்பது போன்று, கதாநாயகி மது குடிப்பது போலவும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் ஆண்டனி, அந்த போஸ்டர் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் மது கொடுப்பதில் ஆண் பெண் என்ற வேறுபாடு பார்க்க வேண்டாம் என்றும், இருவரும் மது குடிப்பது தவறு தான் அதை நான் ஆதரிக்கவில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார். அந்த காலத்தில் திராட்சை ரத்தம் இருந்தது அதை ஜீசஸ் கூட குடிச்சி இருக்காரு என்றும், ஒவ்வொரு காலகட்டத்திலும் மது வேறு வேறு பெயரில் இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





