நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அவரது 25வது படமாக பராசக்தி படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. அமரன் மதராஸி படங்களுக்கு பிறகு அடுத்து வெளியாக உள்ள சிவகார்த்தியேகன் படம் பராசக்தி என்பதால் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அமரனை போலவே இந்த படமும் ஒரு பயோபிக் படமாக உருவாகியுள்ளது. நடிகர்கள் மோகன் ரவி அதர்வா நடிகை ஸ்ரீலீலா போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இந்த படத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பராசக்தி படத்தை தொடர்ந்து இப்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்தை தி கோட் படத்துக்கு பிறகு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்குகிறார். இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகளுக்காக சமீபத்தில் சிவகார்த்திகேயனும் வெங்கட்பிரபுவும் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று திரும்பியிருக்கின்றனர்.
ஏனெனில் இந்த படமும் ஒரு சயின்ஸ்பிக்சன் படமாக தான் உருவாக உள்ளது. தி கோட் படத்தில் விஜயின் முக ஒற்றுமையை வைத்து கேரக்டர்களை வடிவமைத்தது போலவே இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் காட்சிகளில் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்த இயக்குனர் வெங்கட்பிரபு திட்டமிட்டுள்ளார். அதற்காக தான் இருவரும் அமெரிக்கா சென்றிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த புதிய படத்தின் பட்ஜெட் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ. 45 கோடி இயக்குனர் வெங்கட்பிரபு சம்பளம் ரூ. 18 கோடி படத்தின் இசையமைப்பாளர் அனிருத் சம்பளம் ரூ. 12 கோடி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளம் உட்பட சம்பளமாக மட்டுமே மொத்தம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர படத்தின் தயாரிப்பு செலவு ரூ. 50 கோடி எனவும் முடிவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் என்பதால் தினமும் ரூ. 50 லட்சம் என 100 நாட்களுக்கு படப்பிடிப்பு செலவு ரூ. 50 கோடி எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
இதுதவிர இந்த படத்தின் பட்ஜெட் ரூ.150 கோடி கடனுக்கு ரூ. 30 கோடி வட்டி எனவும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 180 கோடி என்றும் கூறுகின்றனர். இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் சிவகார்த்திகேயன் படம் உருவாவது தமிழ் சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து வெளியாகும் பராசக்தி படம் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தால் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமம் ஓடிடி விற்பனை பெரிய அளவில் கைகொடுத்து உதவும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்க்கிறது.





