தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என புகழ் பெற்றவர் ஷங்கர். கடந்த 30 ஆண்டுகளில் அவர் இதுவரை 15 படங்களை மட்டுமே டைரக்ட் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்த ஷங்கர், ஜெண்டில்மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்தார். ஆக்ஷன் கிங் அர்ஜூன் நாயகனாக நடித்த அவரது முதல் படமே மாஸ் ஹிட் படமாக இருந்தது.
தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் ஷங்கர், கமல் கூட்டணியில் உருவான படம் இந்தியன். கடந்த 1998ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக 26 ஆண்டுகளுக்கு பின் கடந்தாண்டில் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் இந்தியன் 2 படம் வெளியானது.
இந்தியன் 2 படம் பார்த்த ரசிகர்கள் ஷங்கர் இயக்கத்தில் இதுபோன்ற மோசமான படம், கமல் நடிப்பில் இதுபோன்ற சொதப்பலான படம் எதுவுமே இல்லை என்று கடுமையாக விமர்சித்தனர். இந்தியன் 2 படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களை ஒரே நேரத்தில் இயக்கியதும், இதற்கிடையே கேம் சேஞ்சர் படப்பிடிப்பில் ஷங்கர் கவனம் செலுத்தியது என 3 படங்களின் வேலையை ஒரே நேரத்தில் ஷங்கர் மேற்கொண்டதே இந்தியன் 2 படம் சொதப்பியதற்கு முக்கிய காரணம் என்று பேசப்பட்டது. மேலும் ஷங்கருக்கு பக்கபலமாக இருந்த எழுத்தாளர் சுஜாதா இல்லாததும் இந்த குளறுபடிக்கு காரணம் என்றும் தகவல் பரவியது.
இந்த சூழலில் இந்தியன் 3 படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இன்னும் சில திருத்தங்கள் கதையில் மாறுதல்கள் செய்து ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்த ஷங்கர் திட்டமிட்டுள்ளார். அதற்கு கமலும் ஓகே சொல்லி விட்டார். அதற்கான பட்ஜெட் ஒதுக்க லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் மறுக்கிறது. ஷங்கர் கேட்கும் பட்ஜெட் தன்னிடம் இல்லை என்று லைகா தடுமாறுகிறது.
அதனால் இந்தியன் 3 படப்பிடிப்பு பல மாதங்களாக தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இந்த பிரச்னை குறித்து, லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஷங்கர் வீட்டுக்கே சென்று பேசியிருக்கிறார். இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தியன் 3 படப்பிடிப்பு துவங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இயக்குனர் ஷங்கர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.





