இயக்குனர் வெற்றிமாறன், தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனராக இருக்கிறார். நல்ல படைப்பாளியாக தன் படங்களை தந்து வருகிறார். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன், வட சென்னை, விடுதலை என அவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.
காமெடி நடிகர் சூரியை கதாநாயகனாக நடிக்க வைத்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கடந்தாண்டின் துவக்கத்தில் வெளியான இந்த படம் வித்யாசமான கதைக்களத்தில் இருந்தது. விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், சேத்தன் என பலரும் நடிப்பில் அசத்தியிருந்தனர்.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த 2ம் பாகத்தில் மஞ்சு வாரியார், விஜய் சேதுபதி மகன் சூர்யா, பவானி ஸ்ரீ, கென்னி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த 2ம் பாகம் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வருகிறார் வெற்றிமாறன். ஆனால் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையவில்லை.
இந்நிலையில் தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்த்த நிலையில், அதற்கு முடிந்துவிடுமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. இதற்கிடையே 2ம் பாகத்தின் நீளம் 4 மணி நேரத்துக்கு மேல் வருகிறது என்று தெரிய வந்துள்ளது. படத்தில் ஒவ்வொரு கேரக்டருக்கும் பிளாஷ்பேக் என வெற்றிமாறன் கிளை கதைகளை எடுத்திருப்பதால் படம் நீளம் தவிர்க்க முடியாதது என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இப்படி 4 மணி நேரம் படம் என்பதால், விடுதலை படத்தை 2ம் பாகம், 3ம் பாகம் என்றுதான் பிரித்து எடுக்க வேண்டும் என்று படக்குழுவினருடன் வெற்றிமாறன் ஆலோசித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அப்படி 2ம் பாகம், 3ம் பாகம் என பிரித்து வெளியிட்டால் மட்டுமே படம் ரசிகர்களுக்கு முழுமையாக திருப்தி தரும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியன் 2 படத்தை எடுத்த போது, இப்படிதான் காட்சிகளும் திரைக்கதையும் நீளமானதால், 2ம் பாகம் மற்றும் 3ம் பாகம் என பிரித்து டைரக்டர் ஷங்கர் இயக்கினார். அதில் 2ம் பாகம் சொதப்பிய நிலையில், இந்தியன் தாத்தா ரசிகர்களை கதற விட்டார். இப்போது அதே பாணியில் வெற்றிமாறனின் விடுதலை 2, விடுதலை 3 ம் பாகம் வெளியாக வாய்ப்புள்ளதால் ஷங்கரை போல வெற்றிமாறனும் சொதப்பி விடுவாரா, என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.





