வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. அதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த லியோ திரைப்படத்தை அவரும் அவரது ரசிகர்களும் ரொம்பவே எதிர்பார்த்திருந்தனர். லோகேஷ் இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பந்தயம் அடிக்கும் என்று நம்பினர்.
படமானது கடந்த மாதம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் படத்துக்கு சென்ற விஜய் ரசிகர்களை லியோ திருப்திப்படுத்தியது. ஆனால் பொதுவான ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியது. குறிப்பாக படத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருப்பதாக ஒருதரப்பினர் கருத்து தெரிவித்தனர். இருந்தாலும் முதல் நாள் வசூலில் சக்கைப்போடு போட்டு 148 கோடி ரூபாயை வசூலித்தது.
தொடர்ந்து வசூல் வேட்டையாடிய லியோ இதுவரை மொத்தம் 600 கோடி ரூபாய்வரை வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் லலித் குமாருக்கும் 100 கோடி ரூபாய்வரை லாபம் வந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து லியோ படத்தின் சக்சஸ் மீட் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். விஜய் குட்டி ஸ்டோரி சொல்லி சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
இதற்கிடையே படம் ரிலீஸாவதற்கு முன்னதாகவே நா ரெடிதான் பாடல் வரிகள் பிரச்னையை சந்தித்தன. அதனையடுத்து அந்தப் பாடலில் நடனம் ஆடிய நடன கலைஞர்களுக்கு சம்பளம் தரவில்லை என்ற பிரச்னை எழுந்தது. அந்தப் பிரச்னை குறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி விளக்கம் அளிக்கும் அளவுக்கு நிலைமை சென்றது கவனத்தில் கொள்ள வேண்டியது.
இந்நிலையில் லியோ படத்துக்கு புதிய பிரச்னை எழுந்திருக்கிறது. அதாவது லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர்களுக்கு இன்னும் ஒரு மாத சம்பளம் பாக்கி இருக்கிறதாம். படத்தின் ஷூட்டிங் முடிந்து செப்டம்பர் மாதம் முழுவதும் அவர்கள் படத்துடைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் மும்முரமாக இருந்தனர். ஆனால் அவர்களுக்கு பட தயாரிப்பு நிறுவனம் இன்னமும் சம்பளம் கொடுக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
லியோ பட சக்சஸ் மீட்டில் தனது உதவி இயக்குநர்களை மேடையில் ஏற்றி கௌரவப்படுத்தினார் லோகேஷ் கனகராஜ். ஆனால் இப்போது அவர்களுக்கு சம்பளம் போய் சேரவில்லை என்ற தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள்; உதவி இயக்குநர்களை மேடை ஏற்றுவது இருக்கட்டும் லோகேஷ்; லலித்திடம் சொல்லி அவர்களுக்கு சம்பளத்தை வாங்கிக்கொடுங்கள் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.





