தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு தாவி மிகப்பெரிய வெற்றி பெற்றவர்களில் பலராலும் அறியப்படுபவர் சிவகார்த்திகேயன். சந்தானம், யோகி பாபு உள்ளிட்டோரும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வெள்ளித்திரையில் அசத்தி வரும் நிலையில், இந்தப் பட்டியலில் தற்போது சேர்ந்திருக்கிறார் கவின்.

ஆரம்பத்தில் சின்னத்திரையில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த அவர், சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பலராலும் அறியப்பட்டார். இதன் பிறகு கவினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது பிக் பாஸ் நிகழ்ச்சிதான். அங்கு சென்ற கவினுக்கு, ஏராளமானோர் ரசிகராக சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்பட்டார்.
பிக் பாஸ் போட்டியில் நிச்சயமாக வெற்றி பெறுவார் என எல்லாரும் எதிர்பார்த்த நிலையில், திடீரென பணப்பெட்டியுடன் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார் கவின். அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் அவருக்கு லிப்ட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

இந்த சூழலில்தான், அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு உடன் இணைந்து டாடா படத்தில் பணியாற்றினார் கவின். அபர்ணாதாஸ் அவருக்கு ஜோடியாக, பாக்யராஜ், ஐஸ்வர்யா, விடிவி கணேஷ் உள்ளிட்ட நடித்தனர். கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம், யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தந்தைக்கு மகனுக்குமான பாசத்தையும், காதலனுக்கும் காதலிக்குமான சண்டை சச்சரவையும் இயக்குனர் மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருந்ததால், ரசிகர்கள் டாடாவை வரவேற்றனர்.
இந்த நிலையில், நடிகர் கவினுக்கு வரும் இருபதாம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது லாஸ்லியாவை காதலிப்பதாக கூறப்பட்டது. இருப்பினும், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பேட்டி அளித்த இருவரும் தாங்கள் காதலிக்கவில்லை என்பதை தெளிவுப்படுத்தினர். இந்த நிலையில் அவர் தனது தோழி மோனிகாவை திருமணம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தொடர்ந்து படங்களிலும் பிஸியாக நடித்து வரும் கவின், அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதேபோல், பியார் பிரேம காதல் படத்தின் இயக்குனர் இலன் உடனும் அவர் கைகோர்த்து இருக்கிறார். ஸ்டார் என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் நிலையில், இதில் இரண்டு நாயகிகள் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லவ் டுடே படத்தில் நடித்த இவானா மற்றும் பேச்சுலர் படத்தில் நடித்த திவ்யபாரதி இருவரும் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார்களாம். இந்த தகவல் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.





