கடந்த சில ஆண்டுகளில் நடிகர் விஜய் நடித்த வாரிசு மற்றும் பீஸ்ட் உள்ளிட்ட படங்களின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் திமுக அரசின் இடையூறு காரணமாக விஜயின் படங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. குறிப்பாக இசை வெளியீட்டு விழாக்களுக்கு போலீசார் மூலம் நிபந்தனைகள் என்ற பெயரில் திமுக அரசு விஜய் படங்களுக்கு அதிக தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
அதனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் போலீசார் அனுமதி மறுத்ததால் திடீர் என ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு தி கோட் படம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியான நிலையில், இந்த படத்துக்கு இசை வெளியீட்டு விழாவே நடத்தப்படவில்லை.
ஆனால் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த அப்போதே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளையும் படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு மேற்கொண்டார். ஆனால் கடைசி நேரத்தில் விஜய் வேண்டாம் என மறுத்துவிட்டார். அதன்பிறகு தி கோட் ரிலீஸான சில தினங்களில் சக்சஸ் மீட் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வரும் டிசம்பர் மாதம் இந்த விழா மலேசியாவில் உள்ள புத்தரகயாவில் நடக்க உள்ளது. இதில் நடிகர் விஜய் மமிதா பைஜூ பூஜா ஹெக்டே பிரகாஷ்ராஜ் கௌதம் மேனன் நரேன் பிரியாமணி இயக்குனர் எச் வினோத் இசையமைப்பாளர் அனிருத் என அனைவருமே கலந்துக்கொள்ள உள்ளனர்.
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் திட்டமிட்டுள்ளது. ஏனெனில் இதுதான் விஜயின் கடைசி படம். ஒருவேளை அவர் 2026ம் ஆண்டு தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழக முதல்வராகி விட்டால் மீண்டும் நடிக்க போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். அதனால் இது சினிமாவை விட்டு அவரை வழியனுப்பும் ஒரு விழாவாகவும் கருதப்படுகிறது.
மேலும் மலேசியாவில் இந்த விழாவை நடத்த கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் விரும்ப காரணம், அங்கு தமிழ் மக்கள் பல லட்சக்கணக்கில் வாழ்கின்றனர். தமிழ் மக்கள் மிக அதிகமாக வாழ்கிற ஊராக உள்ளது. துபாய் போன்ற நாடுகளில் அடிக்கடி தமிழ் சினிமா விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதனால் மலேசியாவை தேர்வு செய்து அங்கு ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.





