நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகையில் ரிலீஸாக உள்ளது. கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி உள்ளார். இது விஜயின் 69வது படமாகும். இது தனது கடைசி படம் என்று ஏற்கனவே நடிகர் விஜய் திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்துவது என்று ஏற்கனவே படக்குழு தரப்பில் உறுதியாக தீர்மானிக்கப்பட்டு விட்டது. ஏனெனில் லியோ தி கோட் ஆகிய படங்களின் இசை வெளியீட்டு விழாக்களை நடத்த முடியவில்லை. லியோ இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் போலீஸ் கட்டுப்பாடுகள் நிபந்தனைகள் என்ற பெயரில் ஆளுங்கட்சி குறுக்கீடுகளால் ரத்து செய்யப்பட்டது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த அடுத்த படம் தி கோட் இசை வெளியீட்டு விழாவை விஜயே வேண்டாம் என்று தவிர்த்து விட்டார். ஆனால் இப்போது ஜனநாயகன் படம் விஜயின் கடைசி படம் என்பதால் கண்டிப்பாக இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழுவினர் தீவிரமாக ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில் மலேசியாவில் வருகிற டிசம்பர் மாதம் 27ம் தேதி ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படுகிறது. இதில் நடிகர் விஜய் இயக்குனர் எச் வினோத் நடிகைகள் பூஜா ஹெக்டே மமிதா பைஜூ மற்றும் கௌதம் மேனன் பிரகாஷ் ராஜ் பாபி தியோல் நரேன் உள்ளிட்ட படக்குழுவினர் திரளாக பங்கேற்க உள்ளனர். தடபுடலாக இந்த விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
ஆனால் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை தமிழ்நாட்டில் துவங்கி கட்சித் தலைவராக உள்ளார். இந்த சூழலில் மலேசியாவில் தனது கடைசி படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்துவது ஏன் என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் நடத்துவதுதானே விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றும் விமர்சனம் செய்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் ஆளுங்கட்சி திமுகதான். ஏனெனில் விஜய் இசை வெளியீட்டு விழாவை தமிழ்நாட்டில் நடத்தினால் அதிக கவனம் பெறுவார் என்பதால் ஏதேனும் இடையூறு செய்வார்கள். கடைசி நேரத்தில் போலீஸ் மூலம் நெருக்கடி தருவார்கள். அதுமட்டுமின்றி நடிகர் விஜயே மக்களை சந்திக்க சனிக்கிழமை தோறும் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதனால் இந்த விழாவை மலேசியாவில் நடத்தப்படுகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மலேசியாவில் உள்ள தளபதி ரசிகர்களும் இந்த விழாவை பண்டிகையாக கொண்டாட ஆர்வமாக உள்ளனர்.





