இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 68வது படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளியாகி 445 கோடி ரூபாய் வசூலித்தது. கடந்தாண்டில் வெளியான தமிழ் படங்களில் அதிகம் வசூலித்த படம் தி கோட் என்பது குறிப்பிடத்தக்கது. 2வது இடத்தில் அமரன், 3வது இடத்தில் வேட்டையன் ஆகிய படங்கள் இருந்தன.
தி கோட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இப்போது நடித்து வரும் படம் ஜனநாயகன். இது அவரது 69வது படம் என்பது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் அவர் நடிக்கிற கடைசி படமும் இதுதான் என்று விஜய் ஏற்கனவே அறிவித்து விட்டார். எச் வினோத் இயக்கத்தில் இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். ஏற்கனவே இவர் பீஸ்ட் படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் மமிதா பைஜூ பிரியாமணி அபிராமி நரேன் கௌதம் மேனன் பிரகாஷ் ராஜ் பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் ஸ்ருதிஹாசனும் நடிப்பதாக ஒரு உறுதி செய்யப்படாத தகவலும் உள்ளது.
கடந்தாண்டு அக்டோபரில் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், இந்த மாதம் 31ம் தேதியுடன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விடும் என்று உறுதியாக சொல்லப்பட்டது. படத்தின் இயக்குனர் எச் வினோத் படப்பிடிப்பு காட்சிகளை திட்டமிட்டு கச்சிதமாக எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.
இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முடிந்தாலும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் இந்த படம் ரிலீஸ் ஆகும். ஏனென்றால் அப்போதுதான் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்கும் விஜய்க்கு, இந்த படம் நல்ல சப்போர்ட்டாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. அதே போல் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீ மேக்தான் ஜனநாயகன் என்ற தகவலும் பரவி வருகிறது.
இந்நிலையில் தற்போது ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் வரை நீடிக்கும் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் மொத்தம் 5 பாடல்கள் என்றும் அதில் 2 பாடல்கள் மட்டுமே ஷூட்டிங் செய்யப்பட்ட நிலையில், இன்னும் 3 பாடல்கள் பாக்கியுள்ளது. அதே போல் முக்கிய சண்டை காட்சி ஒன்றும் எடுக்கப்பட வேண்டிய நிலையில் வருகிற ஜூன் மாதம் வரை ஜனநாயகன் படப்பிடிப்பு நீடிக்கும் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





