இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் ஜனநாயகன் வருகிற 2026ம் ஆண்டில் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய நடிகர் விஜய், ஜனநாயகன் படத்துடன் இனி நடிப்பதில்லை என ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
நடிகர் விஜய் நடித்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் படங்களாக இருந்துள்ளன. நடிகர் விஜய் நடித்த வாரிசு பீஸ்ட் லியோ தி கோட் போன்ற படங்கள் விமர்சன ரீதியாக மக்களிடம் பெரிய வரவேற்பை பெறாத போதிலும் வணிக ரீதியாக இந்த படம் பெரிய லாபத்தை தந்த படங்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் நடிகர் விஜய் தவெக கட்சி நிகழ்ச்சிகளில் பேசி வரும் நிலையில், சினிமாவில் மார்க்கெட் இழந்து நான் அரசியலுக்கு வரவில்லை. என் கேரியரில் உச்சத்தில் இருந்து வந்திருக்கிறேன். பெரிய படை பலத்துடன் களத்துக்கு வந்திருக்கிறேன் என்று பேசி வருகிறார். அதனால் அவரது ஜனநாயகன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கில் தான் விஜய் இப்போது நடித்துள்ளார். 70 சதவீதம் அந்த படத்தின் கதைதான். அந்த படத்தில் விஜய் அரசியலுக்கு வருகிற மாதிரி எல்லாம் காட்சிகள் இருக்கிறது. பல ஊர்களில் மக்கள் வாக்கு செலுத்துவது போன்ற காட்சிகளும் வருகிறது.
மேலும் இதில் ஊழல் செய்த அமைச்சரை கைது செய்து விஜய் இழுத்துச் செல்வது போன்ற காட்சியும் வருகிறது. ஜனநாயகன் படத்தில் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் நெல்சன் அட்லி போன்ற பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். விஜய்க்கு இது கடைசி படம் என்பதால் அவரை பிரியாவிடை கொடுக்கும் விதமாக பல விஷயங்களை சேர்த்து இருக்கின்றனர். அனிருத் ஒரு பாட்டுக்கு தனியாக வந்து டான்ஸ் ஆடி இருக்கிறார். இன்னும் நிறைய சஸ்பென்ஸ்களை இந்த படத்தில் இயக்குனர் வைத்திருக்கிறார்.
திரையுலகை விட்டு அரசியலுக்கு போகும் விஜய், வசூல் சக்கரவர்த்தியாக தான் போக வேண்டும் என்று நினைக்கிறார். இல்லையென்றால் ஜனநாயகன் படம் ஓடவில்லை என்றால் அதனால்தான் அரசியலுக்கு வந்து விட்டார் என்று மோசமான விமர்சனங்கள் வரும். சாதாரணமாகவே விஜய் குறித்து மோசமாக பேசுபவர்கள் படம் ஓடவில்லை என்றால் இன்னும் மோசமாக பேசுவார்கள் என்று வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.





