நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் அவரது 69வது படத்துக்கு ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 26ம் தேதியன்று இந்த படத்தின் டைட்டில் உறுதி செய்யப்பட்டு, பர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர்களும் ஒரே நாளில் வெளியிடப்பட்டன. செல்பி எடுப்பது போலவும், சவுக்கை சுழட்டுவது போலவும் விஜய் ஸ்டில்கள் வெளியாக ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
ஆனால் விஜயின் முதல் படத்தின் டைட்டில் நாளைய தீர்ப்பு. அந்த தலைப்புதான் அவரது கடைசி படத்துக்கும் வைக்கப்பட இருப்பதாக இணையத்தில் தகவல் பரவியது. முதல் படமும் கடைசி படமும் ஒரே டைட்டிலில் அமைவது தளபதிக்கு மட்டுமே என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் ஜனநாயகன் என டைட்டில் மாறிவிட்டது.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஜனநாயகன் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், வருகிற ஏப்ரல் மாதத்துடன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைகிறது. அதிலும் விஜய் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் வரும் பிப்ரவரியுடன் முடிக்க உள்ளனர். மற்ற காட்சிகளுக்காக தான் ஏப்ரல் வரை படப்பிடிப்பு நீடிக்கிறது.
ஏப்ரலுக்கு பிறகு போஸ்ட் புரடக்சன் பணிகளை மெதுவாகவே கொண்டு சென்றாலும் அக்டோபரில் தீபாவளிக்கு ஜனநாயகன் படத்தை மிக சுலபமாக ரிலீஸ் செய்துவிட முடியும் என்பதால், அக்டோபர் ரிலீஸ் என்று படத்தை தயாரித்து வரும் கேவிஎன் புரடக்சன்ஸ் மற்றும் இயக்குனர் எச் வினோத் ஆகியோர் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் இப்போது அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் என்ற முடிவுக்கு தயாரிப்பு நிறுவனமும் இயக்குனரும் வந்துள்ளனர். இதற்கு காரணம் பொங்கல் பண்டிகை என்பது தொடர் விடுமுறை காலம், தவிர சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்கள் உள்ள நிலையில் இந்த படம் வெளியாவது விஜயின் அரசியல் களத்துக்கும் படம் உதவும் என்பதுதான். ஆனால் மற்றொரு முக்கிய காரணமும் இப்போது தெரிய வந்துள்ளது.
இன்னும் ஜனநாயகன் படம் டிஜிட்டல் ரைட்ஸ் விற்கவில்லை. நெட்பிளிக்ஸ் மட்டுமே அதிக விலை கொடுக்கும் ஓடிடி தளமாக உள்ளது. அதே நேரத்தில் 2025ம் ஆண்டுக்காக அனைத்து படங்களையும் நெட்பிளிக்ஸ் கடந்த 2024ம் ஆண்டிலேயே வாங்கி விட்டது. அதனால் 2026ம் ஆண்டில்தான் நெட்பிளிக்ஸ் டிஜிட்டல் ரைட்ஸ் வாங்கும் சூழல் இருப்பதால் அதிக விலைக்கு நெட்பிளிக்ஸ்க்கு ஜனநாயகன் டிஜிட்டல் ரைட்ஸ் விற்கவே அடுத்த ஆண்டுக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது, என்ற உண்மை தெரிய வந்துள்ளது.





