தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். ஆனால் இனி அவர் தொடர்ந்து படங்களில் நடிக்கப் போவதில்லை என்பதை ஏற்கனவே அறிவித்து விட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக மாறிய விஜய் இப்போது வருகி சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் களத்தில் பிஸியாக இருந்து வருகிறார்.
கடந்த பல ஆண்டுகளாக நடிகர் விஜய் நடிக்கும் புதிய படங்களின் தகவல் வெளியாகும் போதெல்லாம் இணையத்தில் அனல் தெறிக்கும். அவரது படத்தின் டீசர் டிரெய்லர் ஃபர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர்கள் ஃபர்ஸ்ட் சிங்கிள் செகண்ட் சிங்கிள் பாடல்கள் போன்றவை வெளியாகும் போது அவை மிகப் பெரிய அளவில் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று டிரண்டிங் ஆகி பல சாதனைகளைப் படைக்கும். சில நிமிடங்களில் அவரது படங்கள் வலைதளங்களில் வைரலாகி விடுகிறது.
அந்த வகையில் நடிகர் விஜயின் கடைசி படம் ஜனநாயகன் டிரெய்லர் நேற்று மாலை 6:45 மணியளவில் வெளியானது. அதிரடி ஆக்சன் களத்தில் உருவான இந்த படத்தில் விஜய் வரும் காட்சிகள் செம மாஸ் ஆக இருக்கின்றன. குறிப்பாக அனல் தெறிக்கும் அரசியல் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய பாராட்டை பெற்று வருகிறது. தளபதி ரசிகர்கள் டிரெய்லரை பார்த்து பெரிய உற்சாகமடைந்துள்ளனர்.
ஜனநாயகன் டிரெய்லர் யூடியூப் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலை தள பக்கங்களில் வெளியிடப்பட்டது. இன்று மாலை 5 மணி வரை நிலவரப்படி யூடியூப் தளத்தில் டிரெய்லர் பார்வை எண்ணிக்கை தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் சேர்த்து ரியல் டைம் பார்வைகளாக 46 மில்லியன் கடந்துள்ளதாக கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கோட் படம் கடந்தாண்டு வெளியானது. தி கோட் படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்தில் 39 மில்லியன் பார்வை சாதனையை படைத்த நிலையில் அந்த சாதனையை ஜனநாயகன் படம் டிரெய்லர் இப்போது முறியடித்துள்ளது.
ஜனநாயகன் டிரெய்லர் இன்ஸ்டாகிராமில் 26 மில்லியன் பார்வைகளை இதுவரை பெற்றுள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி யூடியூப் தளத்தில் தமிழில் 30 மில்லியன் தெலுங்கில் 6 மில்லியன் இந்தியில் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இது மிகப் பெரிய சாதனையாகும். 23 மணி நேரத்தில் இந்த சாதனையை ஜனநாயகன் நிகழ்த்திக் காட்டியுள்ளது.





