நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் வெளியான போது அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் விஜய்தான் என்று சிலர் பேச ஆரம்பிக்க அதுவே கோலிவுட் வட்டாரத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பியது. அந்த நேரத்தில் ரஜினி சொன்ன காக்கா கழுகு கதையும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிவிட இந்த விவகாரம் பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது.
இந்த சூப்பர் ஸ்டார் விவகாரத்தில் ரஜினி ரசிகர்கள் ஒருபுறம் விஜய் ரசிகர்கள் ஒருபுறம் சமூக வலைதளங்களில் பயங்கரமாக சண்டை செய்துக் கொண்டிருக்க விஜய்க்கு போட்டியாக அதுவரை கருதப்பட்ட அஜீத்குமாரை யாருமே கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் ரஜினி, விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன், எனக்கு போட்டி என்று நான் நினைத்தாலே அது தவறு என்று கூறவும், சினிமாவில் ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினிதான் என்று விஜயும் பேசவும் அந்த விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
அதன்பிறகு நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவக்கி இப்போது கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழாவையும் சிறப்பாக நடத்தி முடித்துவிட்டார். மத்தியில் ஆளுகிற பாஜக அரசையும் மாநிலத்தை ஆளுகிற திமுக அரசையும் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பாசிசம் பாயாசம் என்று அந்த கட்சிகளை கலாய்த்தும் வருகிறார்.
இதற்கிடையே விஜய் கடைசியாக நடித்து வரும் படம் ஜனநாயகன். இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தை எச் வினோத் டைரக்ட் செய்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
அதே போல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், கூலி படம் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனை நடந்துள்ளது. கூலி படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ரூ. 110 கோடிக்கு விலை கொடுத்து வாங்கியுள்ளது.
அதே நேரத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் டிஜிட்டல் ரைட்ஸ் விலையாக ரூ. 121 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. அதாவது கூலி படத்தை விட ஜனநாயகன் படம் 11 கோடி ரூபாய் விலை அதிகம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. இந்த வியாபாரத்தில் விஜய்தான் ரஜினியை விட மீண்டும் முன்னிலை பெற்றிருக்கிறார். அரசியல்வாதி ஆன பிறகும் விஜயின் இமேஜ் சினிமாவில் முன்னிலையில் தொடர்ந்து தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.





