நடிகர் விஜய் நடித்த 69வது படம் ஜனநாயகன். பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்த முதல் படம் இது. ஆனால் கடந்த 4 மாதங்களாக இந்த படம் திரைக்கு வராமல் தாமதம் நீடிக்கிறது. இன்னும் சென்சார் சான்று கிடைக்காத சூழலில் படக்குழு விரக்தியில் உள்ளது.
இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஜனநாயகன் படம் இணையத்தில் லீக் ஆனது. கோவை கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு லோக்கல் சேனலில் இந்த படத்தை முழுமையாக ஒளிபரப்பும் செய்து விட்டனர். இதற்காக அந்த பகுதியை சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
அதே போல் இணையத்தில் ஜனநாயகன் படத்தை லீக் செய்த 9 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருக்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு சூழலில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்றார். தமிழ்நாட்டின் முதல்வர் அவர்தான் என்கிற சூழல் உருவானது.
ஆனால் இந்த நிமிடம் வரை அவரை ஆட்சியமைக்க தமிழக கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்காமல் உள்ளார். தற்போது தவெக வசம் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் 113 எம்எல்ஏக்களே உள்ள நிலையில் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கொடுத்தால் மட்டுமே விஜய்க்கு கவர்னர் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார் என்கிற நெருக்கடியான சூழல் நிலவுகிறது.
மேலும் சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் இன்று நடப்பதாக இருந்த முதல்வர் பதவியேற்பு விழாவும் பாதியில் நின்று ரத்து செய்யப்பட்டு விட்டது. பாஜகவின் சூழ்ச்சியால் விஜய் முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தமிழக கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஓரிரு நாட்களில் முதல்வராக விஜய் பதவியேற்பாரா, இல்லையா என்பது முடிவாகி விடும்.
இப்படிப்பட்ட ஒரு மோசமான அரசியல் சூழலில் விஜய் சிக்கி தவித்து வருகிறார். அதே நேரத்தில் வருகிற ஜூன் மாதம் 22ம் தேதி நடிகர் விஜயின் பிறந்த நாள். எனவே அவரது பிறந்த நாளன்று ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்கூட்டிே ஜூன் 18ம் தேதி ரிலீஸ் செய்யவும் வாய்ப்புள்ளது. ஆனால் விஜய் முதல்வர் ஆவதே பெரிய அக்கப்போராக மாறியுள்ள நிலையில் ஜனநாயகன் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர்.





