நடிகர் விஜய் இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
தளபதி 69 என தற்காலிக பெயரிடப்பட்ட இந்த படத்தின் டைட்டில் இன்று காலை 11 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்துக்கு ஜனநாயகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படக்குழு வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் செல்பி எடுப்பது போலவும், பின்னால் மக்கள் கூட்டம் இருப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடிகர் விஜய் கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இதுபோல் அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு அவரை பார்க்க வந்த போது, அங்கிருந்த கேரவன், பஸ் போன்ற பெரிய வாகனத்தின் மீது ஏறி நின்று தனக்கு பின்னால் இருக்கும் கூட்டத்தை காட்டி செல்பி எடுத்திருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
இன்று வெளியான ஜனநாயகன் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் அதே போல் மக்கள் கூட்டத்தை காட்டி, விஜய் தனது செல்போனில் படம் பிடிப்பது போல காட்டியிருப்பது, தளபதி ரசிகர்களுக்கு ஒருவித ஏமாற்றத்தை தந்திருப்பதாக தெரிகிறது. மேலும் படத்தின் டைட்டிலும் அவ்வளவு கேச்சிங் ஆக இல்லை என்றும் தளபதி ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
விஜய் கடைசி படம் என்று அறிவித்த நிலையில் இந்த படத்துக்கு நாளைய தீர்ப்பு என்ற பெயரே கனகச்சிதமாக இருந்தது. அவரது அரசியல் வருகைக்கும் இது பொருத்தமான வார்த்தையாக இருந்தது. முதல் படமும் அதுவே, கடைசி படமும் அதுவே என தலைப்பு ஒன்றாக அமைவது எந்த நடிகருக்குமே அமையாத ஒரு பெருமையாகவும் இருந்தது.
ஆனால் நாளைய தீர்ப்பு என்ற டைட்டில் ரசிகர்கள் மத்தியில் கசிந்து விட்டதால், கடைசி நேரத்தில் அதை ஜனநாயகன் என மாற்றி விட்டதாக ரசிகர்கள் புலம்புகின்றனர். இந்த சூழலில் இன்று மாலை 4 மணிக்கு ஜனநாயகன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி, விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.





