லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் தசெ ஞானவேல், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் திரளாக கலந்துக்கொண்டனர்.
இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, ஒரு டைரக்டருக்கு ஒரு படம் தோல்வியானால், அடுத்த ஹிட் படம் கொடுக்கிற வரைக்கும் நிம்மதியே இருக்காது. அதேபோல் ஹிட் படம் கொடுத்த ஒரு இயக்குனருக்கு முந்தைய படத்தை விட சிறப்பாக அடுத்த படத்தை கொடுக்க வேண்டும் என்ற நிம்மதி இருக்காது.
இன்றைய காலகட்டத்தில் நல்ல இயக்குனர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. முன்பு கதை, திரைக்கதை ஒருவருடையதாக இருக்கும். இன்னொருவர் படத்தை டைரக்ட் செய்வார். ஆனால் இப்போது எல்லாமே ஒரே ஆள்தான். ஒரு படம் ஹிட்டாக மாஸ் ஹீரோ இருந்தால் மட்டும் போதாது. நல்ல தயாரிப்பு நிறுவனமும் வேண்டும்.
நான் ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படத்தை பார்த்தேன். நன்றாக இருந்தது. ஆனால் எல்லா நல்ல படங்களையும் பாராட்டும் நான், அப்போது ஜெய்பீம் படத்தை பாராட்டவில்லை. அந்த நேரத்தில்தான் ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேலிடம் நல்ல லைன் இருப்பதாக என்னுடைய மகள் சௌந்தர்யா என்னிடம் கூறினார். அதையடுத்து அவரை நான் சந்தித்தேன். அப்போது அவர் இந்த படத்தில் நீங்கள் மெசேஜ் சொல்வீர்கள் என்றார். அதெல்லாம் எனக்கு செட் ஆகாது. மக்கள் கொண்டாடுவது போன்ற கமர்ஷியல் கதையாக சொல்லுங்கள் என்றேன்.
அதற்கு அவர் எனக்கு, 10 நாட்கள் டைம் கேட்டார். ஆனால் ரெண்டே நாளில் போன் செய்து கமர்ஷியலாக படம் பண்ண ரெடி என்றார். அதே சமயம் லோகேஷ் கனகராஜ், நெல்சன் போல இல்லாமல் வேறு கோணத்தில் உங்களை காட்டுகிறேன் என்று சொன்னார். அதோடு இந்த படத்துக்கு அனிருத் தான் இசையமைப்பாளர் என்று கூறினார். அவரிடத்தில் இந்த படத்தில் வில்லன் யார் என்று கேட்டேன். அப்போது ராணா நடிப்பதாக சொன்னார். பகத் பாசில் ஒரு பொழுதுபோக்கு கதாபாத்திரம் என்றார்.
அமிதாப் பச்சன் பற்றி இன்றைய ரசிகர்களுக்கு தெரியாது. அவர் வாழ்க்கையில் நிறைய வெற்றி தோல்விகளை பார்த்தவர். வாழ்க்கை இப்படித்தான். மேலே கீழே என நகர்ந்து கொண்டே இருக்கும். குறிப்பாக சகுனிகள் இருக்கிற இந்த சமுதாயத்தில், நல்லவனாக இருந்தால் பிழைக்க முடியாது. கொஞ்சம் சாணக்கியத்தனமும் சாமர்த்தியமும் இருக்கணும். இந்த படம் ஞானவேலுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைய வேண்டும் என்று ரஜினிகாந்த் பேசினார்.





