இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி அறிமுகமான முதல் படம் பருத்தி வீரன். முதல் படத்திலேயே, நடிகர் சிவக்குமாரின் மகன் என்பதை கார்த்தி நிரூபித்து விட்டார். அப்படி ஒரு ரவுடித்தனமாக கேரக்டரில், பருத்திவீரனாக வாழ்ந்து காட்டியிருப்பார். அடாவடி, ரவுடித்தனம், காதல், பாசம், சென்டிமென்ட் என எல்லா காட்சிகளிலும் தனது நடிப்பாற்றலை திறம்பட காட்டி, முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்தார் கார்த்தி.
அடுத்து நான் மகான் அல்ல, தீரன் அதிகாரம் ஒன்று, தோழா, பையா, கடைக்குட்டி சிங்கம், தம்பி, பொன்னியின் செல்வன், அலெக்ஸ் பாண்டியன், சிறுத்தை, சர்தார், விருமன், காஸ்மோரா, ஆயிரத்தில் ஒருவன், சுல்தான், கொம்பன், மெட்ராஸ், ஆயிரத்தில் ஒருவன், சகுனி, பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜா, தேவ் என மொத்தம் இதுவரை 24 படங்களில் கார்த்தி நடித்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து இப்போது, ராஜூ முருகன் இயக்கத்தில், ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். ஜப்பான், கார்த்தி நடிக்கும் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வந்த 24 படங்களில் 18 படங்களுக்கு மேல் நல்ல வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி, நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
முதலில் ஜப்பான் இசை வெளியீட்டு விழா எனக் கூறப்பட்ட நிலையில், இது டிரெய்லர் வெளியீட்டு விழாவாக மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கார்த்தி 25 என்ற பெயரில், ஒரு சிறப்பு விழாவாக இதை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதாவது, தமிழ் சினிமாவில் 25வது படத்தில் நடிக்கும் கார்த்தியின் வெற்றியை கொண்டாடும் விதமாக இந்த சிறப்பு விழா நடத்தப்படுகிறது.
அதன்படி வரும் 18ம் தேதி நடக்கும் இந்த விழாவில், இதுவரை கார்த்தி நடித்த படங்களின் தயாரிப்பாளர்கள், கார்த்தியுடன் நடித்த நடிகர், நடிகையர், படத்தில் பணிசெய்த இயக்குநர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் என அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர். அத்தனை பேரையும் விழாவில் சிறப்பித்து, கார்த்தி நடித்த படங்களில் காட்சிகள் ஒளிபரப்பு செய்து, கடைசியாக ஜப்பான் படத்தின் டிரெய்லர் காட்சியை, வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் மணிரத்னம் பங்கேற்க உள்ளார். ஏனெனில், கார்த்தி ஆரம்ப காலத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவக்குமார், நடிகர் சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட கார்த்தி குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்க உள்ள நிலையில், இவ்விழா ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகின்றன.





