இந்திய சினிமாவின் அடையாளம் என மதிக்கப்படுவராக ஒரு காலத்தில் சொல்லப்பட்டவர் மணிரத்னம். அவரது படங்கள் என்றாலே ஒரு கட்டத்தில் ரசிகர் கூட்டம் அலைமோதும். பெரிய அளவில் அவரது படங்கள் இருக்கும் என அவர் படம் பார்த்து ரசிக்கும் கூட்டம் பெருமையாக பேசும். பிறமொழி நடிகர், நடிகையர் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பதை நேர்காணலில் ஒரு வழக்கமான வசனமாகவே வைத்திருந்தனர்.
ஆனால் மணிரத்னம் படத்தை பார்க்கும் பாமர ரசிகர்களுக்கு மணிரத்னம் படம் என்றாலே சுத்தமாக பிடிக்காது. அவரது படத்தின் பெரும்பாலான காட்சிகள் இருட்டில்தான் இருக்கும். கேரக்டர்கள் பேசும் வசனங்கள் எல்லாமே ஓரிரு வார்த்தைகள்தான். படத்தின் கதையும் பெரிய அளவில் சஸ்பென்ஸ், திகில், திருப்பங்கள் என்றெல்லாம் இருக்காது. மிக மிக சாதாரண படங்களாக தான் அவர் எடுத்தார் என்பதுதான் தமிழ் சினிமா ரசிகர்களின் பார்வையாக இருக்கிறது.
குறிப்பாக ராமராஜன் படத்தை, கவுண்டமணி செந்தில் காமெடியை ரசிக்கும் ரசிகர்களால் மணிரத்னம் படத்தை எல்லாம், ஒரு படமாகவே ஏற்றுக்கொள்ள முடியாது. பழம்பெருமை பேசுபவர்கள் மணிரத்னம் போல உண்டா என்பார்கள். ஆனால் மணிரத்னத்தை விட 100 மடங்கு திறமையான, அறிவான, படைப்புத்திறன் மிக்க இயக்குனர்கள் இந்திய சினிமாவில் இப்போது இருக்கின்றனர் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. இதை திரை விமர்சகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மணிரத்னம் மிக மோசமான படைப்பாளி என்பதற்கான சான்று, கடந்தாண்டில் 2 பாகங்களாக அவர் இயக்கிய பொன்னியின் செல்வன் படம்தான். கல்கி எழுதிய காலத்தை தாண்டி நிற்கிற அத்தகைய ஒரு படைப்பை ஜெயம் ரவி, கார்த்தி போன்ற நடிப்பு அனுபவ முதிர்ச்சியற்ற நடிகர்களை வைத்து எடுத்தது மட்டுமின்றி, கதையின் முடிவை தன் இஷ்டம் போல மாற்றிய அவரை கல்கியின் ஆத்மா எப்போதுமே மன்னிக்காது என படம் பார்த்த ரசிகர்கள், சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்தனர்.
இப்போது நடிகர் கமல்ஹாசனை ஹீரோவாக வைத்து, தக்லைப் என்ற படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் டீசர் காட்சியில் சில விஷயங்களை காட்டிவிட்டு, அந்த படத்துக்கும் டீசருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆரம்பத்திலேயே மிகப்பெரிய புளுகுமூட்டையை அவிழ்த்துவிட்ட மணிரத்னத்தை, கமலை கழுவி கழுவி ஊற்றினர் ரசிகர்கள்.
இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதாக இருந்த மலையாள நடிகர் துல்கர் சல்மான் திடீரென விலகி விட்டார். ஏனெனில் கால்ஷீட் பிரச்னை என்று மழுப்பலான பதில் கிடைத்தது. இப்போது நடிகர் ஜெயம் ரவியும் இந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார். பார்லிமென்ட் தேர்தல் காரணமாக கமலும் அதில் பிஸியாகி விட்டதால், சைபீரியாவில் நடந்து வந்த தக்லைப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இனி அடுத்த சில நாட்களில் கமலும் விலகிவிடுவாரோ என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





