நடிகர் விஜயகுமார் நடிகை மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். இதுவரை 3 திருமணங்கள் செய்துக்கொண்ட வனிதா விஜயகுமார் 3 பேரையும் விவாகரத்து செய்துவிட்டு முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் இருக்கின்றனர்.
நடிகை வனிதா விஜயகுமார் எழுதி டைரக்ட் செய்த படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தில் கதையின் நாயகியாகவும் வனிதா விஜயகுமாரே நடித்திருக்கிறார். வனிதா பிலிம் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் வனிதாவின் மகள் ஜோவிகா இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஜோவிகா தயாரிப்பாளராக அறிமுகமாகி உள்ளார்.
இந்த படத்தில் ராபர்ட் ஸ்ரீமன் ஷகிலா கணேஷ் ஆர்த்தி கணேஷ் செஃப் தாமு கும்தாஜ் பவர்ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். வருகிற ஜூன் மாதம் வெளியாக உள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
இந்த விழாவில் பங்கேற்ற படத்தின் தயாரிப்பாளர் ஜோவிகா விஜயகுமார் பேசியதாவது, இந்த மேடையில் தயாரிப்பாளராக நிற்க வைத்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் இந்த படம் நிறைவடைந்து இருக்காது.
இந்த விழாவுக்கு அனைவரும் வருகை தந்து மனமார்ந்த ஆதரவை அளித்து வருவதால்தான் நாங்கள் தனியாக இல்லை என்ற உணர்வு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் இந்த படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையும் வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் என்னை பிரபலப்படுத்தியது.
உலகில் எங்கு சென்றாலும் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக என்னை நினைத்து என்னோடு போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். நான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறேன் என்று மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் ஜோவிகா விஜயகுமார் உருக்கமாக பேசியிருக்கிறார்.





