தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் கே பாக்யராஜ். இன்றும் இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்றால் அங்கு கே பாக்யராஜ் பெயர்தான் உச்சரிக்கப்படுகிறது. அந்தளவுக்கு திரைக்கதையில் ஒரு மன்னன் என்று அவர் பெயர் பெற்றவர். 1980 90களில் அவரது படங்கள் சக்கை போடு போட்ட வெள்ளி விழா படங்களாகும்.
இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு சுவரில்லாத சித்திரங்கள் படம் மூலம் சினிமாவில் இயக்குனராக மாறினார். தொடர்ந்து மௌனகீதம் இன்று போய் நாளை வா தாவணி கனவுகள் அந்த 7 நாட்கள் என பல வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர். அதே நேரத்தில் எம்ஜிஆரின் தீவிர விசுவாசியாகவும் அவர் இருந்தார்.
இந்நிலையில் அதிமுக கட்சி தேர்தல் பிரசார கூட்டங்களிலும் பங்கேற்று எம்ஜிஆர் ஆதரவாளராக கே பாக்யராஜ் மக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார். எம்ஜிஆர் உடல் நலம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த போது அங்கு மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை பார்க்க அனுமதிக்கப்பட்ட ஒரே நபர் கே பாக்யராஜ் மட்டும்தான்.
அந்தளவுக்கு எம்ஜிஆரின் அன்புக்குரியவராக இருந்தவர் கே பாக்யராஜ். மேலும் எனது கலையுலக வாரிசு என்று கே பாக்யராஜை எம்ஜிஆர் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட கே பாக்யராஜ் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சியை துவக்கினார். ஆனால் அந்த கட்சியை சில ஆண்டுகளிலேயே கலைத்தும் விட்டார்.
அதுகுறித்து இயக்குனர் கே பாக்யராஜ் ஒரு நேர்காணலில் கூறியதாவது, நான் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி ஆரம்பித்தபோது திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தேன். இதனால் திமுக காரங்க எம்ஜிஆர் போட்டாவை வைத்து ஓட்டு கேட்டாங்க. இதனால் அதிமுக திமுக ரெண்டு கட்சிக்கும் பெரிய சண்டையே உண்டாகிடுச்சு.
அப்போது ரிலீஸ் ஆன என் படத்தையும் அதிமுககாரங்க ஓட விடவில்லை. இந்த லூசுப்பய படம் பார்க்காதீங்கன்னு சொன்னாங்க. அப்புறம் படத்தை ஓட வைக்க என்னை வற்புறுத்தி திமுகவை திட்டின மாதிரி ஒரு லெட்டரை எழுதி வாங்கி வெளியிட்டாங்க. இதெல்லாம் பார்த்து எனக்கு ரொம்பவும் கஷ்டமாகிடுச்சு. அப்படி ஒருத்தரை திட்டி கட்சியில் இருக்க வேண்டாம் என்று தான் அன்னைக்கே நான் கட்சியை கலைத்து விட்டேன் என்று கே பாக்யராஜ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





