ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்து கிட்டத்தட்ட 16 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளனர். பின்னாளில் இருவரும் போட்டி நடிகர்களாக வலம் வந்தாலும் நல்ல நண்பர்களாகவே இப்போது வரை இருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவரின் நட்பிற்கு எடுத்துக்காட்டாக அமைந்த சம்பவம் ஒன்றை குறித்து இப்போது பார்க்கலாம்.
1978 ஆம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “முள்ளும் மலரும்”. இத்திரைப்படம் ரஜினிகாந்தின் கெரியரில் மிகவும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. ரஜினிகாந்தே பல முறை பல மேடைகளில் தான் நடித்ததில் தனக்கு பிடித்த திரைப்படம் “முள்ளும் மலரும்” என்று கூறியிருக்கிறார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்தபோது எந்த வித பின்னணி இசையும் இல்லாமல் முழு படத்தையும் பார்த்த தயாரிப்பாளர் வேணு செட்டியார், “இந்த படம் நிச்சயம் ஓடாது, இந்த படத்திற்காகலாம் விளம்பரப்படுத்த மாட்டேன்” என கூறிவிட்டாராம்.
அதன் பின் இத்திரைப்படம் வெளிவந்தபோது ரஜினியின் நண்பர்கள் பலரும், “படம் அருமையாக இருக்கிறது. ஆனால் படத்திற்கு விளம்பரமே இல்லை. விளம்பரப்படுத்தினால் படம் நிச்சயம் வெற்றிப்படம்” என்று கூறியிருக்கிறார்கள்.
அதன் பின் ரஜினிகாந்தும் இயக்குனர் மகேந்திரனும் தயாரிப்பாளர் வேணு செட்டியாரிடம் சென்று படத்தை விளம்பரப்படுத்துமாறு கூறினார்களாம். ஆனால் வேணு செட்டியாரோ அதற்கு ஒத்துக்கொள்ளவில்லையாம்.
இந்த நிலையில்தான் கமல்ஹாசன் இத்திரைப்படத்திற்கு உதவியிருக்கிறார். அவரின் தயவால் இத்திரைப்படத்திற்கு புரொமோஷன் செய்யப்பட்டது. முதலில் இத்திரைப்படம் சொற்ப அளவிலான திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
இத்திரைப்படத்திற்கான விளம்பரங்கள் அதிகரிக்கப்பட்ட பின்பு மக்கள் அதிகமாக திரையரங்குகளுக்கு வரத்தொடங்கினர்களாம். அதன் பிறகுதான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இத்திரைப்படம் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு இருக்கிறது. இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது குறிப்பிடத்தக்கது.





