ஒரு பெரிய வெற்றி என்பது மனிதனுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும். அடுத்த நிலைக்கு தூக்கிச் செல்லும். ஆனால் ஒரு தோல்வி என்பது பல அனுபவங்களை கொடுக்கும். வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்வதற்காக புதிய யோசனைகளை திட்டங்களை வகுத்துக் கொடுக்கும். அதனால் வெற்றியை காட்டிலும், தோல்விகள் எப்போதுமே மதிப்பு மிக்கவை.
லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான படம் இந்தியன் 2. கமல்ஹாசன், 69 வயதிலும் பலவிதமான கெட்டப்புகளை போட்டு இந்த படத்தில் நிறைய மெனக்கெட்டு நடித்திருந்தார். 70 நாட்கள் வரை இந்த படத்துக்காக கால்ஷீட் தந்த கமல், 40 நாட்கள் காலை முதல் இரவு வரை குளிர்பானங்கள், குடிநீர் மட்டுமே குடித்து நடித்திருக்கிறார்.
ஏனெனில் இந்தியன் 2 படத்தில் வரும் காட்சிகளில் மேக்கப் போட்டுவிட்டால் வாயை அசைத்து எதுவும் சாப்பிட முடியாது. வாய் அசைவு கொடுத்தால் முகத்தில், கன்னத்தில் உள்ள மேக்கப் கலைந்துவிடும் என்பதால், திட உணவு இல்லாமல், திரவ உணவுகளை மட்டுமே உட்கொண்டு 40 நாட்கள் இந்தியன் 2 படத்தில் நடித்தார் கமல். 69 வயதில், இவ்வளவு சின்சியாரிட்டி, டெடிகேஷனை நடிகர் கமலிடம் மட்டுமே பார்க்க முடிகிறது.
ஆனால் இந்தியன் 2 படம், மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்தியன் தாத்தா கதற விட்டுவிட்டார் என ரசிகர்கள், கலாய்த்து தள்ளி விட்டனர். எதிர்பார்த்த வசூல் இல்லாமல், லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கும் பலத்த நஷ்டத்தை கொடுத்து விட்டது. இந்தியன் 2 படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு காரணம், படத்தை அவசர கதியில் எடுத்து, அவசர கதியில் போஸ்ட் புரடக்சன்களை செய்து அவசர கதியில் வெளியிட்டது மிகப்பெரிய குழப்பத்தை தந்தது.
இப்போது நடிகர் கமல்ஹாசன் தக்லைப் படத்தில் நடித்து வருகிறார். அதே போல் கல்கி 2898 ஏடி 2ம் பாகத்திலும் நடிக்க கால்ஷீட் தர இருக்கிறார். மேலும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு இயக்கத்தில் தனது 237வது படத்திலும் நடிக்க உள்ளார். அத்துடன், அமொிக்காவில் 90 நாட்கள் ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி வகுப்பிலும் பங்கேற்க உள்ளார். அதனால்தான், நேரமின்மை காரணமாக, விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 8ல் பங்கேற்காமல் அதிலிருந்து விலகி விட்டார்.
தற்போது இந்தியன் 2 படம் தந்த தோல்வியால், கமல்ஹாசன் எடுத்துள்ள மிக முக்கியமான முடிவு, இனி எந்த படமாக இருந்தாலும் ஒரு மாதத்துக்கு முன்பே சென்சார் முடித்துவிட்டு அதன்பிறகு தான் ரிலீஸ் செய்ய வேண்டும். அரக்க பறக்க படம் எடுத்து, போஸ்ட் புரடக்சன் பணிகளை முடித்துவிட்டு, குழப்பமான படங்களை ரசிகர்களுக்கு தரக்கூடாது. எந்த படத்துக்கும் அவசரம் காட்டாமல் பொறுமையாக தர வேண்டும். அது காலதாமதமாக இல்லாமல், படத்தின் வெற்றிக்கான ஒரு நிதானமான செயல்பாடாக இருக்கும் என்றும் அவர் திட்டமிட்டுள்ளார்.





