நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் இப்போதும் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்தியன் 2, இந்தியன் 3 மற்றும் புராஜெக்ட் கே ஆகிய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவியை தொடர்ந்து நடத்தி வருகிறார். விரைவில் இதில் இருந்து அவர் விலக இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்தது. இதனால் பல குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன. பாதிப்படைந்த இடங்களில் மீட்பு பணிகள் நடந்து, மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். உடைமைகளை இழந்தவர்களுக்கு உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவை தரப்பட்டது.
இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள எண்ணூரில் ஒரு தனியார் ஆலையில் இருந்து கச்சா எண்ணெய் பெருமளவில் வெளியேறி, கால்வாய் வழியாக குடியிருப்பு பகுதிகளில் குளமாக தேங்கியிருந்த தண்ணீரில் கலந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்தது.
இதைத்தொடர்ந்து எண்ணூர் துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இன்னும் சில பகுதிகளில் எண்ணெய் கழிவுகள் முழுமையாக அகற்றப்படாமல் அதிகளவில் தேங்கியுள்ளது. அதற்கான முழுமையான பணிகள் இன்னும் துவக்கவில்லை.
இந்நிலையில் நடிகர், மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் இன்று எண்ணூர் பகுதிக்கு நேரில் வந்து கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பகுதிக்கு ஏற்கனவே நான் பலமுறை வந்தவன்தான். கடந்த காலங்களை விட, இந்த முறை பாதிப்பு மிகவும் மோசமாக உள்ளது. நீதிமன்ற உத்தரவபடி இங்குள்ள எண்ணெய் கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும்.
ஆனால் அதற்கான அறிகுறிகள் இல்லை. மீனவர்கள்தான் எண்ணெய் கழிவுகளை அகற்றுகின்றனர். நிபுணர்கள் யாரும் அகற்றும் பணியில் ஈடுபடவில்லை. எண்ணெய் கழிவுகளை அகற்ற பக்கெட்டுகளை கொடுத்திருப்பது மனிதாபிமானம் அற்ற செயல். இனி நிவாரணம், போனஸ் தந்து மக்களை ஏமாற்ற முடியாது. எண்ணயெ் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு அச்சம் ஏற்படும். இது மீனவர்களின் பூமி என்று ஆவேசமாக கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.





