விஜய் நடித்த லியோ படம், வரும் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. வரும் 30ம் தேதி நடப்பதாக இருந்த இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, யாருமே எதிர்பார்க்காத வகையில், திடீரென ரத்து செய்யப்பட்டது, விஜய் ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையே லியோ படத்துக்காக நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்திருப்பதும், அதற்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்திருப்பதும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. லியோ படத்தின் இசை விழா ரத்து ஆன நிலையில், கமல் விஜய்க்காக ஆதரவு குரல் கொடுத்தாரா என்ற சந்தேகமும் பலருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால், உண்மையில் நடந்தது அதுவல்ல. நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் துவக்கத்தில் அந்த படத்தின் கதை குறித்த சில விஷயங்களை முன்கதை சுருக்கமாக கூறி இருப்பார். பொன்னியின் செல்வன் படத்தின் 2 பாகத்திலும் அது தொடர்ந்தது. கமல்ஹாசன் குரலின் உச்சரிப்பே, படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது.
சில மாதங்களுக்கு முன் வெளியான, சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில், நடிகர் விஜய் சேதுபதி மாவீரனின் குரலாக ஒலித்திருப்பார். அவர் பேச பேச தான், சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த செயல்களில் ஈடுபடுவார். அதே போல், சமீபத்தில் வந்த மார்க் ஆண்டனி படத்திலும், துவக்கத்தில் நடிகர் கார்த்தி அதில் வரும் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி பேசுவார்.
அந்த வகையில்தான், இப்போது லியோ படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் குரல் கொடுத்து இருக்கிறார். கடந்த திங்கட்கிழமை அன்று டப்பிங் தியேட்டருக்கு வந்த கமல்ஹாசனை படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வரவேற்று அழைத்து சென்றிருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் நடிகர் விஜயும் அங்கு வந்திருக்கிறார். கமல்ஹாசன் டப்பிங் பேசும்போது விஜயும் அருகில் இருந்து, கமலுக்கு நன்றியும் தெரிவித்து இருக்கிறார்.
விக்ரம் படத்தின் மூலம், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கும் படத்துக்கு பேச அழைத்தால், கமல்ஹாசன் வராமல் தவிர்க்க மாட்டார். அதே வேளையில், விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தால், நிச்சயம் கமலுக்கு அவர் ஆதரவாக நிற்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, இருவரது அழைப்பை மனமுவந்து ஏற்று வந்து கமல் டப்பிங் பேசி இருக்கிறார் எனத் தெரிகிறது.





