நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவியாளராக பணியாற்றியவர் சங்கர். திரைக்கதையை நேர்த்தியுடன் பட்டை தீட்டும் இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது ஜென்டில்மேன். அப்போதே கல்வி வியாபாரம் ஆனதை கூறியிருந்த சங்கர், தனது முதல் திரைப்படத்தில் சிக்சர் விளாசி வெற்றி பெற்றார். படத்தில் ஏ ஆர் ரகுமானின் பாடலும் வலு சேர்த்தது.
இதன் பிறகு யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் பிரபுதேவாவை கதாநாயகனாக்கி காதலன் திரைப்படத்தை இயக்கி அதிலும் வாகை சூடினார். இப்படி முதல் இரண்டு திரைப்படங்களிலும் மிகப்பெரிய சாதனை படைத்த சங்கர், எதிர்காலத்தில் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என்று அப்போதைய சினிமா விமர்சகர்கள் கூறினார்கள்.
அதில் எந்த மாற்றமும் இல்லாமல் கிங் மேக்கராக தமிழ் சினிமாவில் அவர் வலம் வருகிறார். 1996 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம், தமிழ் சினிமாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கமல்ஹாசன் சேனாதிபதி தாத்தா கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஆச்சரிய மூட்டினார். இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிப்புக்காக தேசிய விருதும் கிடைத்தது.
அப்போதே இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கமல்ஹாசனும் இது தொடர்பாக சங்கரிடம் பேசியதாக தெரிகிறது. இருப்பினும், இதற்கான வேலைப்பாடுகள் தள்ளிக் கொண்டே செல்ல கடைசியில் லைக்கா நிறுவனம் இதுவரையும் சேர்த்து வைத்தது. அதன்படி கொரோனாவுக்கு முன்பே இதன் பணிகள் தொடங்கின.
ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடன் மோதல், படப்பிடிப்பு தளத்தில் விபத்து, சங்கர் கமல்ஹாசன் இடையே கருத்து வேறுபாடு உள்ளிட்ட காரணங்களால் இந்தியன் 2 படத்தின் வேலைகள் தடைபட்டன. நீதிமன்றம் வரை சென்று பிரச்சனைக்கு முடிவு கட்டப்பட்ட நிலையில், தற்போது திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. வரும் 12ஆம் தேதி இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சின்ஹா, எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி என ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. இரண்டரை நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லரின் பாதி காட்சியில் சித்தார்த் தான் வருகிறார். சேனாதிபதி தாத்தாவாக கமல்ஹாசன் வரும் காட்சிகள் ரசிக்கும் படி இருந்தாலும் அவரது மேக்கப் உறுத்தலாகவே உள்ளது. முக்கியமாக ட்ரெய்லரில் வரும் சில காட்சிகளே சிவாஜி உள்ளிட்ட படத்தின் வசனங்களை காப்பியடிப்பது போன்று இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். வழக்கம்போல் லஞ்சம், அதனை எதிர்க்கும் தாத்தா என அரைத்த மாவையே சங்கர் அரைத்தது போல தெரிந்தாலும் படம் வந்தால் தான் எதையும் கூற முடியும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.





