தமிழக அரசியல் களத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ( மதிமுக) பொதுச் செயலாளராக முக்கிய இடத்தில் இருந்து வருபவர் வைகோ. தொடர்ந்து பலமுறை எம்பி ஆக நாடாளுமன்றத்தில் பணியாற்றியவர். தேர்தல் பிரசார களத்திலும், அரசியல் மேடைகளிலும் குறிப்பாக நாடாளுமன்றத்திலும் இவரது ஆவேச பேச்சு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள நிலையில் திடீரென அரசியல் களத்தில் இறங்கி விட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கிய நிலையில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். தொடர்ந்து திமுகவை எதிர்த்து கடும் விமர்சனம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது, நடிகர் விஜய் நல்ல பண்பாளர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நான் மதுரை விமான நிலையத்தில் இருந்தேன். பயணிகள் காத்திருக்கிற அந்த கூடத்தில் நான் அமர்ந்திருந்தேன். அந்த விமானத்திலேயே செல்ல நடிகர், தவெக கட்சியின் தலைவர் விஜய் அங்கு வந்தார்.
உள்ளே வந்தவர், சற்று தொலைவில் நின்று என்னை பார்த்தார். என்னை பார்த்தவுடன் என்னை நோக்கி அருகில் வந்தார். அவர் கிட்ட வந்தவுடன் நான் எழுந்திரிச்சுட்டேன். அண்ணே அண்ணே எந்திரிக்காதீங்க, நான் மரியாதை செய்ய தான் வந்தேன் என்று சொன்ன அவர் என்னிடம் ஆசி பெற்றார். அவ்வளவுதான் சொல்வேன்.
இதற்கு முன்னால் இதே கூடத்தில் சில நடிகர்கள், ரெண்டு படம் மூன்று படம் நடித்தவர்கள் அதற்கு பின்னால் காணாமல் போய்விட்டார்கள். பக்கத்துலேயே தான் உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் என்னிடம் பேச மாட்டார்கள். அந்த நடிகர்கள் பேரை எல்லாம் நான் சொல்ல விரும்பலே.
எனக்கு அடுத்த சீட்டுல உட்கார்ந்த 5 அல்லது 6 படங்களில் கதாநாயகனாக நடித்த அந்த இளைஞர், எனக்கு அடுத்த சீட்டுல உட்கார்ந்திருக்கார். ஆனால் என்னிடம் பேசவில்லை. என்னை பார்த்தாலே தெரியும். கருப்பு சால்வையை பார்த்தாலே சொல்லிடுவாங்க. ஆனா அப்படி வர்றவங்க பேச்சு கூட கொடுக்க மாட்டாங்க. அப்ப தான் நான் நெனைச்சேன். இந்த விஜய் கிட்ட இந்த பண்பாடு இருக்கே? ஒரு தன்னடக்கம் இருக்கே? அப்படீன்னு நெனைச்சேன். இதை வீட்டுல கூட போய் சொன்னேன். தன்னடக்கத்தோட என்கிட்ட வந்து மரியாதை செய்கிறார். எனக்கு அவர் பழக்கம் இல்லை. அப்ப அவர்கிட்ட ஒரு நல்ல குணம் இருக்குதுங்கறதை நான் தெரிஞ்சுக்கிட்டேன். தனிப்பட்ட முறையில் பழகுகிற விதத்தில் அவரிடம் அகந்தை ஆணவம் எதுவும் இல்லை என்று வைகோ கூறியிருக்கிறார்.





