கடந்த 2018ம் ஆண்டில் மதுரையில் மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கியவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் உச்சத்தை தொட்ட கமல் அரசியலிலும் பெரிய வரவேற்பை பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அது நடக்கவில்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசனை போலவே நடிப்பில் சாதனை படைத்த அவர் அரசியலில் பின்தங்கிப் போய்விட்டார்.
பின்னர் ஒருவழியாக முட்டி மோதி போராடி திமுக ஆதரவுடன் இப்போது ராஜ்யசபா எம்பியாக ஒரு அங்கீகாரத்தை பெற்றுவிட்டார். முதலில் திமுகவை ஆவேசமாக எதிர்த்த கமல், இப்போது அவர்களுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடும் விமர்சனத்தை சந்தித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நடிகர் விஜய், தமிழக அரசியல் களத்தில் பெரும்புயலை கிளப்பி வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத் தலைவராக மக்கள் மத்தியில் அமோகமான பேராதரவு கிடைத்து வரும் நிலையில், நேற்றைய பிரமாண்ட மதுரை மாநாடு தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் பீதியை கிளப்பியிருக்கிறது.
ஏனெனில் பல மணி நேரம் கொளுத்தும் வெயிலில் மாநாட்டு திடலில் லட்சக்கணக்கான மக்கள் காத்திருந்தனர். ரேம்ப் வாக்கில் விஜயை பார்த்ததும் ரசிகர்கள் காட்டிய உற்சாகமும் உத்வேகமும் அவர் மீதான அபிமானத்தை வெளிப்படுத்தியது. 50க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் மயங்கி விழுந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விஜய், மதுரை மாநாட்டில் நேற்று பேசும்போது நான் சினிமாவில் மார்க்கெட் இழந்து அரசியலுக்கு வரவில்லை. பெரிய படை பலத்தோடு வந்திருக்கிறேன் என்று பேசினார். இதைக் கேட்ட பலரும், நடிகர் கமல் குறித்து அப்படி பேசினார் என்று கூறி வருகின்றனர். இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் கமலிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் தந்து நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, இதற்கு நான் என்ன கருத்து சொல்வது? பேர் சொல்லி இருக்கிறாரா? யார் பேராவது அவர் சொல்லி இருக்கிறாரா? சொல்லி இருக்காரா? அப்புறம் ஏன், அட்ரஸ் தெரியாத லட்டருக்கு நான் பதில் போடலாமா? அவர் தம்பி எனக்கு என்று நடிகர் கமல்ஹாசன் கூறிவிட்டு நகர்ந்து விட்டார். நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு என் தம்பி விஜய் என்று கமல் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.





