இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக, தமிழ் சினிமா ரசிகர்களை அசத்தியிருக்கின்றன. குறிப்பாக விஜயகாந்த் நடித்த ரமணா, விஜய் நடித்த கத்தி, துப்பாக்கி, சர்கார், சூர்யா நடித்த கஜினி, 7ம் அறிவு போன்ற வெற்றிப் படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
எனினும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் தர்பார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில், படம் படுமோசமான தோல்வியை சந்தித்தது. அதனால் 7 ஆண்டுகளாக படவாய்ப்பின்றி இருந்தார் ஏஆர் முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் எஸ்கே 23 என்ற படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கன்னட நடிகை ருக்மணி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் இடையிடையே சிவகார்த்திகேயன், அமரன் படத்தில் விடுபட்ட சில காட்சிகளுக்கான படப்பிடிப்பிலும் கலந்துக்கொண்டார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தொடர்ந்து அடுத்து, இந்தியில் சல்மான்கான் நடிக்கும் ஒரு இந்தி படத்தை டைரக்ட் செய்கிறார் ஏஆர் முருகதாஸ். இந்த படம் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பே சல்மான்கானிடம் கதை சொல்லி ஓகே ஆன நிலையில், அவரது கால்ஷீட்டுக்காக ஏஆர் முருகதாஸ் காத்திருந்தார்.
சல்மான்கான் ஓகே சொன்ன நிலையில், வருகிற 18ம் தேதி முதல் இந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. தொடர்ந்து ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் சல்மான்கான் நடிக்கும் சண்டை காட்சிகள் மற்றும் காதல் காட்சிகளை படமாக்க ஏஆர் முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். ஜூலை 20ம் தேதி வரை இந்த படத்தின் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளார்.
அதனால் வரும் 18ம் தேதி முதல், ஒரு மாதத்துக்கு எஸ்கே 23 படத்துக்கு ஷெட்யூல் பிரேக் விட்டுள்ளார் டைரக்டர் ஏஆர் முருகதாஸ். இந்தி படத்தின் ஒரு மாத ஷூட்டிங்கை முடித்துவிட்டு, மீண்டும் எஸ்கே 23 படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் துவங்க இருக்கிறார். பிறகு எஸ்கே 23 படப்பிடிப்பை ஒரே மூச்சாக முடித்துவிட்டு, இந்தி பட ஷூட்டிங்குக்கு திரும்பவும் செல்கிறார். இந்தி படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா கமிட் ஆகியிருக்கிறார். ஏற்கனவே அனிமல் படத்தில் ஏகப்பட்ட கிளாமரில் நடித்த ராஷ்மிகா, இந்த படத்தில் எல்லையற்ற கவர்ச்சியில் ரசிகர்களை திணறடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது.





