நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காங்கிரஸ் ஆதரவாளராக அந்த காலகட்டத்தில் இருந்தவர். அப்போதைய முதல்வர் கர்மவீரர் என அழைக்கப்படும் காமராஜருடன் நெருங்கிய நட்பில் இருந்தார். காமராஜர் மறறும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் சிவாஜி கணேசன் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டவர்.
அதனால் காங்கிரஸ் கூட்டங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பங்கேற்பது வழக்கமாக இருந்தது. அப்போது திமுக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் திமுகவில் இருந்த எம்ஜிஆரை கூட பல மேடைகளில் சிவாஜி கணேசன் விமர்சித்து பேசியிருக்கிறார். ஆனாலும் சிவாஜி மீது எப்போதும் அதே அன்பை நட்டை வெளிப்படுத்தியவர் எம்ஜிஆர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, முதல்வராக காமராஜர் இருந்த போது சிவாஜி கணேசன் நடிக்கும் ஒரு படத்தின் துவக்க விழாவுக்கு அழைத்து சென்றுவிட்டார்கள். அவருக்கு அப்படி போய் எல்லாம் பழக்கமில்லை.
இருந்தாலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மீது இருந்த அன்பின் காரணமாக அந்த விழாவில் அவர் கலந்துக்கொண்டு இருக்கலாம். அந்த விழாவில் பேசிய காமராஜர், எனக்கு இந்த சினிமா பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாது. கூப்பிட்டாங்கன்னு வந்துட்டேன்.
நான் கைராசிக்காரன் என்றார்கள். அதெல்லாம் ஒரு ராசிக்காரனும் இல்லை. இந்த படத்துக்கு பேர் என்னன்னு கேட்டேன். பார்த்தால் பசி தீரும் என்று சொன்னாங்க. பார்த்தால் எப்படி பசி தீரும்ன்னு வரும்போது ரொம்ப நேரமா யோசிச்சுக்கிட்டே தான் வந்தேன்.
ஆனா அதுக்கு இப்போ தான் இங்க வந்ததுக்கு அப்புறம் தான் அர்த்தம் தெரியுது. இவ்வளவு பேர் இந்த படத்துல நடிக்கிறாங்க. இந்த படத்துக்காக நிறைய பேர் வேலை செய்யறாங்கன்னு தெரியுது. இவ்வளவு பேர் சேர்ந்து பாடுபட்டு படத்தை எடுக்கறாங்க. இந்த படத்தை நீங்க எல்லாம் பார்த்தால் அவங்க பசி தீரும். அதனால் பேரு சரியா தான் வெச்சிருக்காங்க என்று காமராஜர் கூறியதாக இந்த தகவலை சீமான் பதிவு செய்திருக்கிறார்.





