இந்தி படவுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் திஷா பதானி. இவர் தமிழில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அந்த படம் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக கதையே இல்லாத ஒரு படமாக கங்குவா உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
ஆனால் கங்குவாபடத்தில் நாயகியாக நடித்த திஷா பதானிக்கு நடிக்கவே வாய்ப்பு தரவில்லை. அவர் இந்த படத்தில் நடித்திருக்க தேவையில்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது பான் இந்தியா படம் என்பதால், இந்தியில் பிரபல நடிகையாக உள்ள அவரை இந்த படத்தில் சில காட்சிகளில் வியாபார யுக்தியாக காட்டியுள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் நடிகை திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் சிங் பதானியிடம் உத்தரபிரதேச அரசில் உயர் பதவி வாங்கி தருவதாக கூறி 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ரூ 25 லட்சம் மோசடி செய்துள்ளனர். அரசாங்கத்தில் உள்ள உயர் அதிகாரிகளுடன் தங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கின்றனர்.
நாங்கள் கேட்கும் பணத்தை நீங்கள் கொடுத்தால் அரசாங்க கமிஷனில் உயர் பதவி வாங்கி தருவதாகவும் சில மாதங்களுக்கு முன்பு, முன்னாள் போலீஸ் அதிகாரி ஜெகதீஷ் சிங் பதானியிடம் மர்ம நபர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதுகுறித்து யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் அவர்கள் பேசியதை எல்லாம் அவர் முழுமையாக நம்பியுள்ளார்.
அந்த மர்ம கும்பல் சொன்னதை எல்லாம் முழுமையாக நம்பிய ஜெகதீஷ் சிங் பதானி, ரூ. 20 லட்சத்தை அவர்களது வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். மேலும் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் கொடுத்திருக்கிறார். 25 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து 3 மாதங்களுக்கு மேலாகியும் அவருக்கு எந்த பதவியும் அரசாங்கத்தில் வழங்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மோசடி கும்பலிடம் தான் கொடுத்த பணத்தை 25 லட்சம் ரூபாயை திரும்ப கேட்டுள்ளார். அப்போது அந்த கும்பல் அவரை மிரட்டியுள்ளது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெகதீஷ் சிங் பதானி, இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை தேடி வருகின்றனர். பிரபல நடிகையின் அப்பா அதுவும் முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருக்கும் அவர், இப்படி 25 லட்சம் ரூபாயை மர்ம கும்பலிடம் ஏமாத்திருப்பது பாலிவுட்டில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





