கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. பிரம்மாண்டமான முறையில், அதீத பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. போதாக்குறைக்கு படத்தை பலரும் இணையத்தில் கிண்டல் கேலிக்கு உள்ளாக்கினர். இதன் காரணமாகவே கங்குவா திரைப்படம் பரிதாபத்திற்கு உள்ளானது.
இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்திருந்தார் சூர்யா. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மே மாதம் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்தில் தூத்துக்குடி காரனாக, பாரிவேல் கண்ணன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா.
காதலுக்காக தனது அடிதடியை விடும் கதாபாத்திரத்திலும் சரி, முகத்தில் வராத சிரிப்பை வரவழைத்ததிலும் சரி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கி நின்று குரல் கொடுப்பதிலும் சரி என படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் தனது ரோலை உணர்ந்து கச்சிதமாக செயல்பட்டிருந்தார் சூர்யா. கதாநாயகியாக நடித்திருந்த பூஜா ஹெக்டேவும் தனது பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
முதல் பாதியை விறுவிறுப்பாக கொண்டு சென்ற கார்த்திக் சுப்புராஜ், இரண்டாம் பாதியை அப்படியே வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று நம்மை ஆச்சரியப்படுத்தி இருந்தார். படம் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும், வழக்கம்போல இணையத்தில் அதனை கிண்டல் அடித்தனர். இப்படியான சூழலில் அதற்கு பேட்டி ஒன்றில் கார்த்திக் சுப்புராஜ் பதில் அளித்துள்ளார்.
அதில், சமீப நாட்களாக பணம் கொடுத்து ஒரு படத்திற்கு வெறுப்பை பரப்பச் செய்வது நிகழ்ந்து கொண்டே வருகிறது. இதற்காக அவர்கள் தனியாக ஒரு அலுவலகம் போட்டு, முழு நேரமும் இந்த வேலையாகவே திரிந்து வருகிறார்கள். நான் தியேட்டர்களுக்கு செல்லும்போது பலரும் ரெட்ரோ நன்றாக இருப்பதாகவே கூறினார்கள். ஆனால் கலவையான விமர்சனத்தை இங்கு கொண்டாடுகிறார்கள்.
ரெட்ரோ திரைப்படத்தின் நீட்டிக்கப்பட்ட வெர்சன், சீரிஸாக வெளிவரும். மொத்தம் நான்கு எபிசோடுகள் இருக்கும். ஒரு எபிசோடு 30 முதல் 40 நிமிடங்களுக்கு இருக்கும். இதற்கு ஓடிடி நிறுவனம் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும், இந்த முயற்சியை வெளிக்கொண்டுவரும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.





