தமிழ் சினிமாவில் சாகா வரம் பெற்ற கலைஞர்களாக சிலர் வாழ்ந்து மறைந்து இருக்கின்றனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கவியரசு கண்ணதாசன் என அந்த வரிசையில் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் தமிழ் சினிமாவில் அவரது குரலில் பாடப்பட்ட பாடல்கள் மூன்று தலைமுறை கடந்து நான்காவது தலைமுறையினரும் இன்று ரசித்து கேட்டு மகிழ்கின்றனர்.
பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியர் எஸ்பிபி. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் பாடிய மிகப்பெரிய சாதனை நாயகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் என்றால் அது மிகையல்ல. சிகரம், பிரியமானவளே, காதலன், கேளடி கண்மணி, அவ்வை சண்முகி உள்ளிட்ட சில படங்களிலும் எஸ்பிபி நடித்திருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவின் முக்கிய ஆளுமையாக வலம் வந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம். 50, 000 பாடல்களுக்கு மேல் அவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜிஆர் சிவாஜி காலம் துவங்கி ரஜினி கமல் படங்களில் பாடிய அவர் 3வது தலைமுறையாக விஜய் அஜித் வரை என மூன்று தலைமுறைகளை கடந்தும் பாடிக் கொண்டிருந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று காலத்தில், கொரோனா தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்த நிலையில், மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த மண்ணை விட்டு மறைந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம். சென்னையில் எஸ் பி பாலசுப்பிரமணியம் நுங்கம்பாக்கம் காம்தார் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் வாழ்ந்த அந்த பகுதிக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று எஸ் பி பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரண் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார்.
எஸ்பிபி யின் மகன் எஸ்பிபி சரண் கோரிக்கையை ஏற்று சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் முதல் தெருவிற்கு எஸ் பி பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். மேலும் திரையுலகில் எஸ்பிபியின் கலைச் சேவையை பாராட்டி இந்த பெயர் சூட்டப்படுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் மறைந்த தினம் இன்று. அந்த நாளில் சென்னையில் அவர் வாழ்ந்த குடியிருப்பு சாலைக்கு எஸ் பி பாலசுப்ரமணியம் சாலை என பெயர் சூட்டப்படுவதாக தமிழக முதல்வர் அறிவித்திருப்பது, தமிழ் சினிமா வட்டாரத்தில் பலத்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது பாடல்களுக்கு ரசிகர்களாக என்றென்றும் இருக்கும் ரசிகர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.





