எடிட்டர் மோகனின் மூத்த மகன் மோகன் ராஜா. ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த அவர், ஜெயம் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அந்தஸ்தை பெற்றார். தனது தம்பி ரவியை வைத்து இந்த திரைப்படத்தை எடுத்த மோகன் ராஜா, இதில் மாபெரும் வெற்றி கண்டார். ஜெயம் படத்திற்கு கிடைத்த வரவேற்பால், அதன் நாயகன் ரவியை அனைவரும் ஜெயம் ரவி என்று அழைக்க ஆரம்பித்தனர்.
இதன்பிறகு தனது தம்பியை வைத்து, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்டார் மோகன் ராஜா. ஆனால் அவர், தெலுங்கில் எடுக்கப்பட்ட படங்களையே ரீமேக் செய்வதாகவும், இவர் மோகன் ராஜா அல்ல ரீமேக் ராஜா என்றும் பலர் கிண்டல் அடித்தனர்.
அதேசமயம் ரீமேக் செய்தாலும், அதில் எந்தவித குறையும் இல்லாமல், வெற்றியாக மாற்றும் சூத்திரம் அவருக்கு தெரிந்திருப்பதாக மோகன் ராஜாவை பலர் பாராட்டினர். இப்படியான சூழலில், தனது தம்பியை வைத்து இயக்கும் எண்ணத்தை கைவிட்ட மோகன் ராஜா, தளபதி விஜய் உடன் இணைந்து வேலாயுதம் படத்தை இயக்கினார்.
இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதன் பிறகு மோகன் ராஜா, தனது சொந்தக் கதையில் விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்து எடுத்த திரைப்படம்தான் தனி ஒருவன். ஜெயம் ரவியே இதில் ஹீரோவாக நடிக்க, படத்தைப் பார்த்து பார்த்து செதுக்கி இருந்தார் மோகன் ராஜா. ஹீரோவை விட வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, கனமான கதாபாத்திரத்தை வடிவமைத்து இருந்தார்.
சித்தார்த் அபிமன்யு எனும் அந்த கேரக்டரில் அரவிந்த்சாமி சரியாக பொருந்தி போக, படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. தனி ஒருவன் திரைப்படம் வெளிவந்து எட்டு ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில், இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக மோகன் ராஜா சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு, இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேசி இருக்கும் அவர், தனி ஒருவனுக்கான கதையை முதன் முதலில் தெலுங்கு நடிகர் பிரபாஸிடம் கூறியதாகவும், அவரை மனதில் வைத்தே இந்த கதையை எழுதியதாகவும் தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க போலீஸ் கதையை உருவாக்கி அதை பிரபாஸிடம் கூறியதாகவும், ஆனால் அவர் காதல் சார்ந்த படத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக கூறியதால் அதன் முடிவை கைவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதன் பிறகு வேலாயுதம் படத்தை எடுத்து விட்டு, பிரபாஸிடம் கூறிய கதையை இன்னும் கொஞ்சம் வடிவமைத்து தனி ஒருவனை எடுத்ததாக கூறியிருக்கிறார். இதனை அறிந்த ரசிகர்கள், நல்ல வாய்ப்பை பிரபாஸ் மிஸ் செய்து விட்டாரே என்று கருத்து கூறி வருகின்றனர்.





