நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி வெளியான படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. உலகம் முழுவதும் வசூல் 150 கோடி ரூபாயை தாண்டவில்லை. ஆனால் 2000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று பிரமோ நிகழ்ச்சியில் கூறப்பட்டது.
சூர்யா நடித்த படங்களில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து அவரது 10 படங்களும் படுதோல்வியடைந்தன. அதே நேரத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான தசெ ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படம் மற்றும் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று ஆகிய 2 படங்களும் வணிக ரீதியான வெற்றியை பெற்றன.
கங்குவா படம் படுமோசமான தோல்வியை சந்தித்த நிலையில் தமிழ்நாட்டில் தியேட்டர் ஷேர் மட்டும் 12 கோடி ரூபாய் என்ற அளவில் மட்டுமே கிடைத்துள்ளது. கங்குவா படத்தை தயாரித்த வகையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு 143 கோடி ரூபாய் வரை பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஓடிடி தளத்தில் வெளியான கங்குவா படம் பார்த்த ஒரு தரப்பினர், அந்தளவுக்கு படம் மோசம் கிடையாது. சில விஷயங்களை மட்டும் தவிர்த்திருந்தால் தொழில்நுட்ப ரீதியாக இது நல்ல படம்தான் என விமர்சித்துள்ளனர்.
கங்குவா படம் தந்த பலத்த நஷ்டத்தை தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குனர் நலன்குமாரசாமி இயக்கத்தில் உருவான படம் வா வாத்தியார். இந்த படத்தில் நடிகர் சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி நடித்துள்ளார். இந்த படம் வருகிற பொங்கல் அல்லது பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், இந்த படம் தள்ளிப் போகிறது.
ஏனெனில், வா வாத்தியார் படம் ரிலீஸாகும் பட்சத்தில் கங்குவா படம் தயாரிக்க கடன் கொடுத்த பலரும், கடன் பாக்கியை உடனே தருமாறு கோர்ட்டில் கேஸ் போடுவார்கள். கடனை திருப்பித் தர நெருக்கடி தருவார்கள் என்ற சிக்கல் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் கடன் தொல்லை தவிர்க்க படத்தை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி வா வாத்தியார் படத்துக்காக 140 நாட்கள் ஷூட்டிங் நடந்துள்ளது. இன்னும் 15 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கு ஏற்கனவே நிறைய செலவு செய்துள்ள நிலையில், தயாரிப்பாருக்கு ஏற்கனவே நஷ்டம் நெருக்கடியை தந்துள்ளதால், இன்னும் அதிகமாக செலவு செய்ய முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. கங்குவா படம் தந்த தோல்வியால், கார்த்தி படம் வெளியாவதில் நெருக்கடி நீடிக்கிறது.





