காமெடி நடிகர் கருணாஸ் பல படங்களில் காமெடி ரோலில் நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர். கானா பாடகராக இருந்த கருணாஸை நடிகர் சூர்யா நடித்த நந்தா படத்தில் லொடுக்கி பாண்டி என்ற கேரக்டரில் காமெடி நடிகராக இயக்குனர் பாலா அறிமுகப்படுத்தினார்.
முதல் படத்திலேயே கருணாஸ் தனது அட்டகாசமான காமெடி நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதிலும் தனக்கு தண்டனை தந்த மாஜிஸ்திரேட் வீட்டிலேயே அவர் திருடும் காட்சி பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அடுத்து பிதாமகன் பாபா வசூல்ராஜா எம்பிபிஎஸ் சிட்டிசன் பொல்லாதவன் என பல படங்களில் காமெடி ரோலில் கருணாஸ் அசத்தினார்.
பிறகு ஒரு கட்டத்துக்கு பிறகு திண்டுக்கல் சாரதி அம்பாசமுத்திரம் போன்ற படங்களில் கதாநாயகனாகவும் கருணாஸ் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். எந்தவிதமான பாத்திரமாக இருந்தாலும் அதில் அழுத்தமான நடிப்பை கருணாஸ் தந்துவிடுகிறார். பிறகு அரசியல்வாதியாக மாறிய கருணாஸ் இப்போது சினிமா அரசியல் என இரண்டிலும் பயணித்து வருகிறார்.
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். நெடுஞ்சாலை படத்தில் ஓட்டல் சிறுவனாக நடித்த கென் கருணாஸ் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் மற்றும் விடுதலை 2 படங்களில் அழுத்தமான கேரக்டர்களில் நடித்து சிறந்த நடிப்பை தந்திருந்தார். இப்போது யூத் என்ற படத்தில் கதாநாயகனாக கென் கருணாஸ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் இயக்குனரும் அவரே தான்.
மேலும் யூத் படத்தில் ஜீவி பிரகாஷ்குமார் இசையில் கென் கருணாஸ் சொந்த குரலில் பாடியும் இருக்கிறார். இந்த படத்துக்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ள நிலையில் படம் ரிலீஸாவதற்கு முன்பே ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரம் வேகமாக நடந்துள்ளது. அதுவும் பெரிய விலைக்கு இந்த படம் வியாபாரம் ஆனதால் படக்குழுவினர் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் கென் கருணாஸ் கூறியதாவது, சின்ன வயசுல இருந்தே என்னிடம் அப்பா அவ்வளவாக பேசவே மாட்டார். கொரோனா காலத்துக்கு அப்புறம்தான் என்கிட்ட அப்பா பேசவே ஆரம்பிச்சார். அப்புறம் இரண்டு பேரும் நிறைய பேசுவோம். அப்பாகிட்ட நான் அப்போ, ஏம்பா என்கிட்ட சின்ன வயசுல நீ பேசவே இல்லை என்று கேட்டேன். இல்லை நீ வளர்ந்து 18 வயசு ஆகும்போது உன்கிட்ட பேசலாம்ன்னு இருந்தேன். சின்ன வயசுல உன்கிட்ட பேச எனக்கு எதுவுமே இல்லைன்னு அப்பா சொன்னார் என்று கென் கருணாஸ் கூறியிருக்கிறார்.





